தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக கடற்கரை பகுதியில் 30 ஜிகாவாட் (30 ஆயிரம் மெகாவாட்) திறன் கொண்ட காற்றாலைகளை கடலுக்குள் அமைக்க மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக (நோடல் போர்ட்) தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை அந்த அமைச்சகம் நியமித்துள்ளது. இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 2 ஜிகாவாட் (2000 மெகாவாட்) திறன் கொண்ட காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன.




இந்த காற்றாலைகளின் இறகுகள் மிகவும் பெரியதாக இருக்கும். காற்றாலை உதிரி பாகங்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் வைத்து இணைத்து, அதனை கடலுக்குள் குறிப்பிட்ட தொலைவுக்கு கொண்டு சென்று நிறுவப்படும். இதற்கு தேவையான வசதிகளை செய்வதற்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2 ஜிகாவாட் காற்றாலை அமைக்கும் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.




தூத்துக்குடி- கொழும்பு- மாலத்தீவு- கொச்சி- தூத்துக்குடி இடையே சிறிய வகை பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இந்த கப்பல் போக்குவரத்தை தொடங்க 2 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இலங்கை அரசிடம் அந்நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த பேச்சுவார்த்தை முடிந்து இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்து இன்னும் 3 மாதங்களில் இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.




சர்வதேச சுற்றுலா சொகுசு கப்பல்களை தூத்துக்குடி துறைமுகத்துக்கு தொடர்ந்து இயக்க ஒரு சர்வதேச கப்பல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்களும் தூத்துக்குடியை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களை ஆய்வு செய்துள்ளனர். எனவே, சுற்றுலா சொகுசு கப்பல்களும் அதிகமாக தூத்துக்குடிக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.




பல்வேறு வகையான சரக்குகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்து, அவைகளை துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யும் வகையில் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் கோவையில் பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்காக்களை அமைக்க மத்திய கப்பல் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கோவையில் 200 ஏக்கர் பரப்பளவிலும், தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் 100 ஏக்கர் பரப்பளவிலும் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும்.


தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கும் சூரிய மின் ஆலை மற்றும் மைக்ரோ காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், தூறைமுக வளாகத்தில் பசுமை ஹைட்ரஜன், அமோனியா, மெத்தனால் சேமிப்பு வசதி 2 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு பசுமை ஏரிபொருள் நிரப்ப முடியும். துறைமுகத்தில் ஏற்கனவே 6 மின்சார கார்கள் பயன்பாட்டில் உள்ளன. கூடுதலாக மின்சார கார்கள் மற்றும் பேருந்துகளை வாங்கவும், மின்சார வாகனங்களுக்கு 5 இடங்களில் சார்ஜிங் வசதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.7055.95 கோடி செலவில் வெளித்துறைமுக திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 16 மீட்டர் மிதவை ஆழத்துடன் கூடிய 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்கப்படுகின்றன என்றார்