விடுதலை படத்தில் இடம்பெற்ற காட்டுமல்லி பாடலை ரசித்துப் பாடி நடிகர் சேத்தன் பகிர்ந்துள்ள வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


தமிழ் சினிமாவில் தேசிய விருது வென்ற முக்கிய இயக்குநரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் விடுதலை பாகம் 1.


ஹிட் அடித்த பாடல்கள்


நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, நடிகை பவானி ஸ்ரீ, நடிகர் சேத்தன், இயக்குநர்கள் ராஜீவ் மேனன், கௌதம் மேனன், தமிழ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம், இணையத்தில் விவாதப்பொருளாகி வரவேற்பைப் பெற்றது.


விடுதலை படத்தின் மூலம் வெற்றிமாறன் படத்துக்கு முதன்முறையாக இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற ’உன்னோட நடந்தா’, ’வழிநெடுக காட்டு மல்லி’ பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்று அனைத்து தரப்பு ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன.


பாடி அசத்திய சேத்தன்


இந்நிலையில் ’விடுதலை’ படத்தில் மோசமான உயர் காவல் துறை அதிகாரியாக கலக்கி வில்லனாக ரசிகர்களை கதிகலங்க வைத்த நடிகர் சேத்தன், இந்தப் படத்தின் காட்டு மல்லி பாடலைப் பாடி வீடியோ பகிர்ந்துள்ளார்.


இந்த வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் நாயகி பவானி ஸ்ரீ ’சார்’ என இதய எமோஜி பகிர்ந்து இந்த வீடியோவில் கமெண்ட் செய்து வரவேற்பு தெரிவித்துள்ளார்.


 






நேற்று முன் தினம் (ஏப்.20) காட்டு மல்லி வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சேத்தனின் இந்த வீடியோவும் தற்போது இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


வில்லனாக மிரட்டிய சேத்தன்


‘விடாது கருப்பு’, ‘மெட்டி ஒலி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் ஆதர்ச டிவி நடிகர்களில் ஒருவராகக் கலக்கிய சேத்தன், சினிமாவில் தொடர்ச்சியாக நடித்து வந்தாலும், விடுதலை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்டி நடித்து மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.


இந்நிலையில், முன்னதாக தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த சேத்தன், படம் பார்த்துவிட்டு தனக்கு பல பேர் போன் செய்து பாராட்டினார்கள் என்றும், தியேட்டரில் தன்னுடைய மனைவி தேவதர்ஷினியும் மகளும் தன் கதாபாத்திரத்தை பார்த்து விட்டு அடித்தார்கள் என்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் தன் கணவரின் நடிப்பு பற்றி மனம் திறந்த நடிகை தேவதர்ஷினி, ”இப்படி ஒரு முகம் சேத்தனுக்கு இருப்பதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே என என்னை பலரும் கேட்டார்கள்” எனக் கேலியாக இந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.