ISRO PSLV C-55 : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ சார்பில், பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-55
சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான TELEOS-02 செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி.சி-55 (PSLVC-55) ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட் விண்ணல் ஏவப்பட உள்ளது.
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 741 கிலோ எடை கொண்ட TELEOS-02 செயற்கைக்கோள், 16 கிலோ எடை கொண்ட லுமிலைட்-4 என்ற 2 செயற்கோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது. பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட்டுக்கான 25 மணி நேரம் 30 நிமிட கவுண்ட்டவுன் நேற்று பகல் 12.49 மணிக்கு தொடங்கியது.
சிங்கப்பூர் செயற்கைகோள்:
மேலும், சிங்கப்பூர் செயற்கைக்கோளை வைத்து ராக்கெட் ஏவப்படுவது இதுமுறையல்ல. ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் 155 கிலோ எடையுள்ள சிங்கப்பூரின் நன்யாங் என்ற செயற்கைக்கோளை சுமந்து விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தாண்டின் தனது முதல் திட்டத்தை பதிவு செய்தது. அதை தொடர்ந்து, எல்.வி.எம்-3 மூலம் வணிக செயல்பாட்டிற்கான 36 ஒன்வெப் செயற்கைக்கோளை மார்ச் மாதம் இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியது.
சிறப்பு
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. 750 கிலோ எடை கொண்ட TELEOS-2 விண்கலம் ஹாட்ஸ்பாட் கண்காணிப்பு மற்றும் மூடுபனி மேலாண், விமான விபத்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பலவற்றிருக்கு உதவுகிறது. மேலும், இந்த செயற்கைக்கோள் ரேடார் முலம் 1 மீட்டர் தெளிவுதிறனில் தரவுகளை வழங்கும் திறன் கொண்டது.
மேலும், புதிய வசதியில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் ராக்கெட் என்ற பெருமைய பி.எஸ்.எல்.வி.சி-55 பெற்றுள்ளது. அதாவது முந்தைய ராக்கெட் ஏவுதல் போல் இல்லாமல், ராக்கெட்டின் பல்வேறு நிலைகளை ஒருங்கிணைந்து புதிய முறையில் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பயணங்களை தொடங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட் மாதிரியுடன் நேற்றுமுன்தினம் இரவு திருப்பதிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு சென்றது. நேற்று காலை திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபட்டனர். அந்த குழுவில் இஸ்ரோவின் சந்தோஷ், யசோதா, சீனிவாச குப்தா, வனஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.