வெற்றிமாறன் இயக்கத்தில் மார்ச்.31 ஆம் தேதி வெளியான விடுதலை திரைப்படம்,  வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், படம் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 30 கோடிகள் வரை வசூலித்துள்ளது.


இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க திரையரங்குகளில் மார்ச்.31ஆம் தேதி விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது.  பவானி ஸ்ரீ, தமிழ், ராஜீவ்மேனன், சேத்தன், கௌதம் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், நெட்டிசன்கள் என பல தரப்பினரும் இந்தப் படத்தை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.


இந்நிலையில் இந்தியா முழுவதும் விடுதலை படம் கடந்த 13 நாள்களில் 29.04 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் தகவல்களை வெளியிடும் Sacnilk தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விடுதலை படம் முதல் நாள் 3.85 கோடிகளையும்,  இரண்டாம் நாள் 3.8 கோடி ரூபாய் வசூலும், மூன்றாம் நாள் 5.05 கோடி ரூபாய் வசூலையும் நான்காம் நாள் 2 கோடிகளும், ஐந்தாம் நாள் 2.25 கோடி ரூபாயும், ஆறாம் நாள் 1.95 கோடிகளையும், ஏழாம் நாள் 1.75 கோடிகளையும், எட்டாம் நாள் 2.15 கோடிகளையும், ஒன்பதாம் நாள் 2.3 கோடிகளையும், பத்தாம் நால் 2.5 கோடிகளையும், கடந்த இரண்டு நாள்களாக சுமார் 1 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் முதல் வாரத்தில் மட்டும் விடுதலை திரைப்படம் 20.65 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


40 கோடிகள் பட்ஜெட்டில் விடுதலை திரைப்படம் உருவான நிலையில், விசிக தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் முன்னதாக விடுதலை திரைப்படம் பார்த்து படக்குழுவினரையும் வெற்றிமாறனையும் வாழ்த்தியிருந்தனர். 


மேலும் முன்னதாக விடுதலை படம் பார்த்து இயக்குநர் வெற்றிமாறன், சூரி ஆகியோரை ரஜினிகாந்த் நேரில் பாராட்டியும் தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுப் பதிவும் பகிர்ந்தது கவனமீர்த்தது.  


“விடுதலை... இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்துக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என ரஜினிகாந்த் பாராட்டியிருந்த நிலையில், சூரி ரஜினிக்கு நன்றி தெரிவித்திருந்தார். 


எனினும் விடுதலை படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலை மட்டுமே அடிப்படையாக வைத்து எடுக்கப்படவில்லை, சோளகர் தொட்டி நாவல், வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டதாக சர்ச்சைகள் இணையத்தில் வெடித்தது குறிப்பிடத்தக்கது.