நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ளது பார்பரம்மாள் புரம். இங்குள்ள பர்மா தெருவை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களுக்கு ஜெபஸ் அபினதாப் (28) என்ற மகனும், ரெமிஸ் எல்சி லாசரஸ்(17) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ரெமிஸ் எல்சி லாசரஸ் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவரது சகோதரர் ஜெபஸ் அபினதாப் இன்ஜினியராக வேலை செய்து வந்தார்.
இச்சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெபஸ் அபினதாப் உள்ளிட்ட இருதரப்பை சேர்ந்தவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி ஜெபஸ் அபினதாப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் கைதாகி 15 நாட்களுக்கு மேல் ஆகியும் ஜாமீன் கிடைக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் தாய் நிர்மலா மற்றும் சகோதரி ரெமிஸ் எல்சி லாசரஸ் ஆகிய இருவரும் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் தாய் நிர்மலா அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரெமிஸ் எல்சி லாசரஸ் தன்னுடைய துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் தாய் நிர்மலா வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் நீண்ட நேரமாகியும் கதவை தட்டி திறக்காத நிலையில் அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ரெமிஸ் எல்சி லாசரஸ் தூக்கில் தொங்கிய படி பிணமாக இருந்துள்ளார். இதனை பார்த்த தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இது குறித்து வடக்கு விஜய நாராயணம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ரெமிஸ் எல்சி லாசரஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தனது சகோதரர் ஜெபஸ் அபினதாப்புக்கு ஜாமீன் கிடைக்காத விரக்தியில் இருந்த ரெமிஸ் எல்சி லாசரஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060