ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் பணியாற்றிய படத்தொகுப்பாளரும், இயக்குநருமான விட்டல் ரமணன் காலமானார்.
சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் என திரை ஜாம்பவான்கள் நடித்து ஹிட் கொடுத்த படங்களில் வீடியோ எடிட்டராக இருந்த ஆர் விட்டல் என்ற விட்டல் ரமணன் இயற்கை எய்தினார். 90 வயதான இவர் தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விட்டலின் மனைவி உயிரிழந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற ஒரு மகள் உள்ளார்.
ஏவிஎம் நிறுவனத்தில் 40 படங்களிலும், எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட 71 படங்களிலும் எடிட்டராக விட்டல் ரமணன் பணியாற்றி உள்ளார். இது மட்டும் இல்லாமல் ரஜினியின் ஆடுபுலி ஆட்டம், படிக்காதவன், முரட்டு காளை, நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட 33 படங்களில் எடிட்டராக இருந்துள்ளார். கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் உள்ளிட்ட 10 படங்களில் பணியாற்றி உள்ளார். இது மட்டும் இல்லாமல் சிவாஜி நடித்த 13 படங்களிலும், நாகேஷின் சர்வர் சுந்தரம், ஜப்பானில் கல்யாண ராமன், ராஜா, சின்ன ரோஜா ஆகிய திரைப்படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார்.
இவர்கள் மட்டும் இல்லாமல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 12 படங்கள், யோகானந்த் இயக்கத்தில் 10 படங்கள் என மொத்தமாக 170 திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக விட்டல் இருந்துள்ளார். முத்தான முத்தல்லவோ, பெண்ணைச் சொல்லி குற்றமில்லை, முடிசூடா மன்னன் படங்களை தயாரித்துள்ளார். வீட்டுக்கு வந்த மருமகள், உன்னைத்தான் தம்பி, எங்களுக்கும் காதல் வரும், தொட்டதெல்லாம் பொன்னாகும் படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் மறைந்த பழம்பெரும் படத்தொகுப்பாளரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விட்டல் ரமணின் இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணியளவில் டைரக்டர்ஸ் காலனியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.