Vidaamuyarchi: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது விடாமுயற்சி திரைப்படம் நாளை உலகெங்கும் ரிலீசாகிறது. இரண்டாண்டுகள் கழித்து வெளியாகும் அஜித்தின் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.


விடாமுயற்சிக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து:


நாளை படம் வெளியாக உள்ளது என்றாலும், கடந்த சில நாட்களாகவே விடாமுயற்சி கொண்டாட்டம் தொடங்கியது. குறிப்பாக, இன்று மாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அஜித்தை வாழ்த்தி ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு இணையத்திலும், திரையரங்கிலும் விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பத்மபூஷண் அஜித் நடித்த விடாமுயற்சி படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றே வாழ்த்து போஸ்டர்கள் வெளியாகி வருகிறது. 


சட்டமன்ற தேர்தல்:


கோலிவுட்டில் தொடக்க காலம் முதலே போட்டி நடிகர்களாக திகழ்பவர்கள் அஜித் - விஜய். ரஜினி - கமல் போல இவர்களும் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களாக வளர்ந்துள்ளனர். இந்த நிலையில், விஜய்க்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் ரசிகர்களின் வாக்குகள் அடுத்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது. 


இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விடாமுயற்சி படம் வெற்றி பெற வாழ்த்துகளை விஜய் ரசிகர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் இதுநாள் வரை அஜித் ரசிகர்களுடன் வார்த்தை மோதலில் சில விஜய் ரசிகர்கள் நடத்தி வந்த நிலையில், தற்போது இருவரது ரசிகர்களும் ஒற்றுமையுடன் இருப்பது போல போஸ்டர்கள் வருவதும், வாழ்த்துச் செய்தி வருவதும் ஆரோக்கியமானதாக சினிமா வல்லுனர்களால் கருதப்படுகிறது.


அஜித் ரசிகர்கள் வாக்கு: 


வரும் சட்டமன்ற தேர்தலில் அஜித் ரசிகர்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக இயங்க வைக்கும் வகையில் பல்வேறு பணிகள் நடந்து வருவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், அதுபோன்ற சம்பவங்கள் நடந்திடாத வகையில் விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழகத்தினரும் தீவிர பணியாற்ற திட்டமிட்டுள்ளனர். 


ரசிகர்களாக அஜித், ரஜினி ரசிகர்களுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டாலும், அரசியல் கட்சியினராக அனைத்து ரசிகர்களின் ஆதரவையும் பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வியூகம் வகுத்துள்ளனர். அதன் எதிரொலியாகவே விடாமுயற்சி படத்திற்கான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்திருப்பதை காண முடிகிறது. 


அதேசமயம், விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் விடாமுயற்சி படத்தையும், அஜித்தையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.