Magizh Thirumeni: விடாமுயற்சியை விடுங்க! மகிழ் திருமேனியின் மாஸ்டர்பீஸ் இந்த படம்தான் - வொர்த் வர்மா!
விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியின் மாஸ்டர் பீஸ் திரைப்படமாக அவரது மீகாமன் திரைப்படம் தற்போது வரை திகழ்கிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் நடிகர் அஜித். இவரது நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் நாளைக்கு வெளியாகிறது. இரண்டு வருடத்திற்கு பிறகு அஜித்தின் படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.
மகிழ் திருமேனியின் மாஸ்டர்பீஸ்:
முன்தினம் பார்த்தேனே படம் மூலமாக இயக்குனராகி தடையற தாக்க, தடம் ஆகிய படங்கள் மூலமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ் சினிமாவில் கொண்டாடப்படாத அசாத்திய திறமை கொண்ட இயக்குனர்களில் ஒருவர் மகிழ் திருமேனி. மகிழ் திருமேனியின் திறமைக்கு மிகச்சிறந்த படம் மீகாமன்.
கோஸ்ட் கான்செப்ட்:
வசூல் ரீதியாக அப்போது இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், மிகச்சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் மீகாமன். கோஸ்ட் என்ற கான்செப்டை அப்போதே இந்த படத்தில் கையாண்டிருப்பார் மகிழ் திருமேனி. தமிழ் சினிமாவில் வழக்கமான டெம்ப்ளேட்டில் சொல்லப்பட்டு வந்த குற்றவாளியுடன் குற்றவாளியாக சேர்ந்து குற்றவாளியைப் பிடிக்கும் கதையை ஜனரஞ்சகமாக வித்தியாசமான கண்ணோட்டத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக தந்திருப்பார் மகிழ் திருமேனி.
அவரது திரைக்கதைக்கு தனது நடிப்பால் பலம் சேர்த்திருப்பார் ஆர்யா. கோவாவில் ஆள்கடத்தல், மிரட்டல், போதைப்பொருள் கடத்தல் ஆகிய தொழில்களில் மிகப்பெரிய தாதாவாக உலா வருபவன் ஜோதி. ஒட்டுமொத்த கோவாவையும் தனது கட்டுப்பாட்டில் ஜோதி வைத்திருந்தாலும் ஒருவருக்கு கூட ஜோதி யாரென்று தெரியாது.
வில்லன் கதாபாத்திரம்:
இதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜோதியை, நாயகன் எப்படி கைது செய்கிறார்? என்பதே படத்தின் கதை. இதை மிகவும் வித்தியாசமாக முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக நகர்த்தியிருப்பார் மகிழ் திருமேனி. குறிப்பாக, ஜோதி என்ற அந்த முகம் தெரியாத வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அசுதோஷ் ராணா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவரது பலத்தையே பயன்படுத்தி ஜோதியை ஆர்யா கொண்டு செல்லும் கிளைமேக்ஸ் காட்சி மிக மிக அற்புதமாக இருக்கும்.
பாராட்டும் ரசிகர்கள்:
ஆர்யா, அசுதோஷ் ராணா, ரமணா, ஆஷிஷ் வித்யார்த்தி என படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அற்புதமாக நடித்திருப்பார்கள். படத்தில் நாயகி ஹன்சிகா மோத்வானியை தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தியிருப்பார். வீண் பாடல் காட்சிகளோ, காதல் காட்சிகளோ படத்தில் இல்லாமல் இருப்பதே படத்திற்கு பலமாக இருக்கும்.
2014ம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியான இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருப்பார். நேமிசந்த் ஜபக் இந்த படத்தை தயாரித்திருப்பார். சதீஷ்குமார் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் எடிட்டிங்கில் இந்த படம் உருவாகியிருக்கும்.
மகிழ் திருமேனியின் மாஸ்டர்பீஸ்:
இந்த படத்தை அப்போது ரசிகர்கள் பெரிதளவில் கொண்டாடவில்லை. ஆனால், இப்போது பலரும் மகிழ் திருமேனியின் மாஸ்டர் பீசாக மீகாமனை பாராட்டி வருகின்றனர். ஆக்ஷன் த்ரில்லர் படம் விரும்புபவர்களுக்கு மீகாமன் மிகச்சிறந்த என்டர்டெயினர் ஆகும். இப்படி ஒரு வித்தியாசமான திரைக்கதையுடன் விடாமுயற்சி படமும் அமைந்திருக்குமா? என்பது நாளை தெரிந்துவிடும்.