Trump Vs Netanyahu: கெத்து காட்டிய ட்ரம்ப்... புகழ்ந்து தள்ளிய நெதன்யாகு... நடந்தது என்ன.?
அமெரிக்காவில், அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. அதன் பின் கூட்டாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், ட்ரம்ப் கெத்தாக பேசியுள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர், இருவரும் கூடாட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில்தான், ட்ரம்ப் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமரின் அமெரிக்க சுற்றுப்பயணம்
அமெரிக்காவில், இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், பல்வேறு நாட்டு தலைவர்களும் அவரை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வெள்ளை மாளிகையில் அதிபரை ட்ரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, போர் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனர்.
காசாவை கைப்பற்றப் போவதாக ட்ரம்ப் அதிரடி
இருவரது பரஸ்பர சந்திப்பிற்குப் பிறகு, ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காசாவை அமெரிக்கா கைப்பற்றப்போவதாக அறிவித்தார். அப்பகுதியிலுள்ள பாலஸ்தீனியர்கள், எகிப்து, ஜோர்டான் போன்ற பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார். மேலும், அங்குள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியேறிய பிறகு, அந்த இடத்தை சொந்தமாக்கி மேம்படுத்துவோம் என அதிரடி காட்டினார் ட்ரம்ப். அங்குள்ள வெடிக்காத குண்டுகள், கட்டிட இடிபாடுகளை அகற்றி, அப்பகுதியை மேம்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்தி, மக்களுக்கு வீடு, வேலை வாய்ப்பு வசதிகளை செய்து கொடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
ட்ரம்ப்பை புகழ்ந்த நெதன்யாகு
ட்ரம்ப்பை தொடர்ந்து பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேலுக்கு கிடைத்த மிகப்பெரிய நண்பர் ட்ரம்ப் என்று புகழ்ந்தார். மேலும், ட்ரம்ப்பின் ஆலோசனை வரலாற்றையே மாற்றக் கூடியது என்றும், இந்த ஆலோசனை கருத்தில் கொள்ளக்கூடியது என்றும் தெரிவித்தார்.
அதோடு, இஸ்ரேலுக்கு வெள்ளை மாளிகையில் இருந்த மிகப்பெரிய நண்பர் ட்ரம்ப் தான் என்றும், அதனால் தான், இஸ்ரேல் மக்கள் ட்ரம்ப் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் கூறினார். மேலும், காசாவில் சில வேலைகளை இஸ்ரேல் முடிக்க வேண்டும் எனவும், இஸ்ரேலின் எதிர்காலத்தை பாதுகாக்க ட்ரம்ப் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஹமாஸை ஒழித்து, பணயக் கைதிகளை விடுவித்து, காசா இனிமேல் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்வது உள்ளிட்ட 3 இலக்குகளை அவர் எடுத்துரைத்தார். போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்றும், அந்த வெற்றி அமெரிக்காவின் வெற்றியாக இருக்கும் என்றும் நெதன்யாகு தெரிவித்தார்.