ஏராளமான திறமை கொண்ட பலருக்கும் சரியான வாய்ப்புகள் அமையாததால் அவர்களின் பாதை வேறு விதமாக சென்று விடும். அப்படி எக்கச்சக்கமான திறமைகளை உள்ளடக்கிய ஒருவர்தான் நடிகை விசித்திரா. அவரின் திறமைகளை வெளிக்காட்ட சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் ஒரு துணை நடிகையாக சினிமாவுக்குள் நுழைந்த விசித்திரா மெல்ல மெல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய படங்களில் மட்டுமின்றி ஹிந்தி படங்கள் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மிகவும் ஒரு பிரபலமான நடிகையாக வலம் வந்தார். 'கிளாமர் குயின்' என ஒரு காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட நடிகை விசித்திராவுக்கு இன்று பிறந்தநாள். 



ஆரம்ப காலகட்டம் :


விசித்திராவின் உண்மையான பெயர் ஜெயந்தி. அனைவரும் இவரை செல்லமாக ஜெயா என்று தான் அழைப்பார்களாம். இரு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உடன் பிறந்த வீட்டில் மூத்த பெண்ணாக பிறந்தவர் விசித்திரா. பத்தாம் வகுப்பு படிக்கும் போதே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய 17வது வயதில் 'பொற்கொடி' என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அப்படம் வெளியாகவில்லை. அதற்கு பிறகு ஒன்று இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் 1992ம் ஆண்டு வெளியான  'தலைவாசல்' படத்தில் மடிப்பு அம்சா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அப்படம் விசித்திராவுக்கு நல்ல ஒரு அடையாளத்தை பெற்று கொடுத்தது. அது அவரின் திரைப்பயணத்தில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்த ஒரு திரைப்படம். 



குடும்ப தலைவி :


அதன் தொடர்ச்சியாக கமல், ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், விஜய், அஜித், கார்த்தி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். அமராவதி, ராசி, பொண்ணு விளைந்த பூமி, அமைதிப்படை உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களில் நடித்திருந்தார். உச்சத்தில் இருக்கும் போது காதல் கணவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப தலைவியாக செட்டிலாகிவிட்டார். சமையலில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்ததால் சொந்தமாக  ரெஸ்டாரெண்ட் ஒன்றை மைசூரில் நடத்தி வருவதால் அங்கேயே செட்டிலாகி விட்டார்களாம். 



காதல் - திருமணம் :


தெலுங்கு படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக பாலக்காடு சென்ற இடத்தில்தான் நடிகை விசித்திரா தனது காதல் கணவர் ஷாஜியை சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்ட மூன்றே நாளில் இவர்களின் உறவில் சிக்கல் ஏற்பட பிரிந்துவிடலாம் என முடிவு செய்த போது கணவர் ஷாஜி நம்பிக்கை கொடுத்து விசித்திராவை முழுமையாக ஏற்றுக்கொண்டாராம். இந்த தம்பதியினருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஆரம்ப காலகட்டத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல கடுமையான சோதனைகளை எதிர்கொண்டுள்ளனர். 



சின்னத்திரையில் ரீ என்ட்ரி :


மிகவும் துணிச்சலான ஒரு பெண்மணியான விசித்திரா, சின்னத்திரை மூலம்  18 ஆண்டுகளுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான 'ராசாத்தி' சீரியலில் ஒரு அருமையான கேரக்டரில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை வென்றார். அந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதன் மூலம் இன்றைய தலைமுறையினர் மத்தியில் மீண்டும் ஒரு பிரபலமான பர்சனாலிடியாக மாறினார் விசித்திரா.  



பிக்பாஸ் வாய்ப்பு :


அதன் மூலம் அமைந்தது தான் 'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் மிகவும் அருமையாக அனைவருக்கும் டஃப் கொடுக்கும் ஒரு போட்டியாளராக கலக்கி வருகிறார். 82 நாட்களையும் கடந்து சிங்க பெண்ணாக செயல்பட்டு வரும் விசித்திராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பொதுவாக வயதில் அதிகம் உள்ள போட்டியாளர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் விசித்திரா அசத்தலாக கன்டென்ட் கொடுத்து நிகழ்ச்சியில் சூப்பராக பயணித்து வருவதால் அவர் டைட்டில் வின்னராக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. 


இந்த 50 வது பிறந்தநாளை விசித்திரா பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ்களுடன் கொண்டாட உள்ளார். 


ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே விச்சு மா !!!