வைகுண்ட ஏகாதசியை ஒட்ட் தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இறைவழிபாட்டில் ஈடுபட்டனர். 


ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்க வாசல் திறப்பு:


[வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் எழுப்பிய  கோவிந்தா...கோவிந்தா..ரங்கா .... ரங்கா... என்ற முழக்கங்கள் கோயில் முழுக்க எதிரொலித்தது. முன்னதாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும் உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து அதிகாலை 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து துலா லக்கனத்தில் புறப்பட்டு வெளியில் வந்தார்.


108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12ம்தேதி இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 13ம்தேதி காலை துவங்கியது. உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று மோகினி அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணிக்கு நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.  அங்கு மாலை 4.30 மணி வரை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் பாசுரங்களை அரையர்கள் நம்பெருமாள் முன்பு அபிநயத்துடன் இசைத்தனர். இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வ்ல் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


கோட்டை பரவாசுதேவர் கோயில்:


தருமபுரி கோட்டை அருள்மிகு வரலஷ்மி சமேத  பரவாசுதேவ பெருமாள்  சுவாமி திரு கோவிலில்   அதிகாலை மணி 5.30 க்கு பரமபத வாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.  தொடர்ந்து ஸ்ரீவர மகாலட்சுமி சமேத பரவாசு தேவர் சொர்க்க வாசலில் எழுந்தருளி தூப தீப நைவேத்தியம் செய்து சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது பரமபத வாசல் வழியாக சாமி புறப்பாடு நடந்து கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் அளித்தார். ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்து விழாக்குழுவினர் பக்தர்களுக்கு வழங்கினர்.  இந்த நிகழ்ச்சியில் இரவு முழுவதும் காத்திருந்து  ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


காஞ்சிபுரம் ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோயில்:


காஞ்சிபுரம்  ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயிலிலும் பரமபத சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. 


சிங்கபெருமாள் கோயில்:


வைகுண்ட ஏகாதசி நாளன இன்று அதிகாலையில் சொர்க்க வாசல்  திறக்கப்பட்டு, அதன் வழியாக பக்தர்களுக்கு பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார்.  இந்த நிகழ்வில் சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி,  மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் மற்றும்  ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாள் சாமியை தரிசனம் செய்தனர்