வேட்டையன்


த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , துஷாரா விஜயன் , ரானா டகுபதி , மஞ்சு வாரியர் ,  ரித்திகா சிங் , கிஷோர் , அபிராமி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் டிரைலர் டிரைலர் வெளியாகியுள்ளது. 


வேட்டையன் டிரைலர்



இயக்குநர் ஞானவேலின் முந்தைய படமான ஜெய் பீம் பழங்குடி மக்கள் மீது செலுத்தப்படும் ஒடுக்குமுறை பற்றி மிக வெளிப்படையாக பேசியது. இன்னொரு பக்கம் கடந்த ஆண்டு ரஜினியின் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது இந்த இருவரின் கூட்டணியில் அமைந்துள்ள வேட்டையன் படம் 50 சதவீதம் ஞானவேல் படமாகவும் 50 சதவீதம் ரஜினியின் படமாகவும் உருவாகி இருப்பதை இந்த டிரைலரில் பார்க்க முடிகிறது. 


பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் படி காவல்துறைக்கு பொதுமக்களிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. என்கவுண்ட ஸ்பெஷலிஸ்டான ரஜினி இந்த குற்றவாளிகளை தேடி பிடித்து சுட்டுக்கொள்ளும் வேட்டையைத் தொடங்குகிறார். அதே மறுபக்கம் உயர் அதிகாரியான அமிதாப் பச்சன் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு எதிரான கொள்கை உடையவராக நடித்துள்ளார். பணம் , அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்ற ரானா டகுபதியே படத்தின் வில்லனாக இருக்கலாம். மாடர்ன் திருடனாக வரும் ஃபகத் ஃபாசில் படத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைவார் என்று எதிர்பார்க்கலாம். துஷாரா விஜயன் , அபிராமி , கிஷோர் , ரித்திகா சிங் என பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் கதை முழுக்க முழுக்க ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் என இரு கதாபாத்திரங்களின் கொள்கை முரண்பாட்டை மையப்படுத்தியதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


ஜெயிலர் போன்ற ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெயினர் படத்திற்கு பின் வேட்டையன் படம் வெளியாவது படக்குழுவிற்கு சில சவால்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா மற்றும் கபாலி ஆகிய படங்கள் பல பாசிட்டிவான அம்சங்களைக் கொண்டிருந்தாலும் ரஜினி சமூக கருத்துள்ள படங்களில் நடிப்பது ரசிகர்களுக்கு பெரிதாக திருப்தியான் அனுபவமாக இல்லை. அந்த வகையில் வேட்டையன் படத்தை வெற்றிபெற செய்வது முழுக்க முழுக்க இயக்குநர் ஞானவேல் கையில் உள்ளது. அதற்கேற்றார்போல் தேவையில்லாத பில்டப் இல்லாமல் இதுதான் கதை என டிரைலரில் சொல்லியும் இருக்கிறார்கள். அனிருத்தும் பின்னணி இசையில் அடக்கியே வாசித்திருக்கிறார்.