இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகையாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி கொண்டாட பல புராணங்கள் கூறப்பட்டாலும் அம்பிகையை 9 நாட்கள் வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த 9 நாட்களும் அம்பிகை ஒவ்வொரு பெயரில், ஒவ்வொரு நிறத்தில் பக்தர்களால் வணங்கப்படுகிறது.
நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை அக்டோபர் 3ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, நாடு முழுவதும் நவராத்திர பண்டிகைக்காகன கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது. நவராத்திரி என்றாலே தமிழ்நாட்டில் கொலு பொம்மைகளை வைத்து வீடுகளில் பூஜை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கொலு பொம்மை வைப்பது எப்படி? | Navarathri Golu Rules
நவராத்திரிக்காக கொலு பொம்மைகளை வைத்து வணங்குவதை பக்தர்கள் பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர், தங்கள் வீடுகளில் பல்வேறு பொம்மைகளை அடுக்கி நவராத்திரி கொலு அமைக்கின்றனர். நவராத்திரி பண்டிகைக்காக கொலு பொம்மைகள் அடுக்கும் திசையானது கிழக்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
கொலு வைப்பதற்கான வரிசை ஒற்றைப் படையில் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3ல் தொடங்கி அதிகபட்சம் 11 வரை கொலு படிகள் அமைக்க வேண்டும். இதில் தங்களால் எத்தனை வரிசை அடுக்க முடியுமோ அத்தனை வரிசை அடுக்கிக் கொள்ளலாம். ஒற்றைப்படையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. கொலுவிற்கு பயன்படுத்தப்படும் பொம்மைகள் பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்டிருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
எந்த வரிசையில் எந்த பொம்மைகள்?
கொலுவின் முதல் படியில் ஓரறிவு உயிரினங்ளான மரம், செடி, கொடி ஆகியவற்றவை அடுக்க வேண்டும். இரண்டாவது படியில், நத்தை, சங்கு போன்றவற்றின் சிலைகளை அடுக்க வேண்டும். 3வது படியில் கரையான், எறும்பு போன்ற ஊர்வன சிலைகளை அடுக்க வேண்டும்.
நான்காவது படியில் வண்டு, நண்டு போன்றவற்றின் பொம்மைகளை அடுக்க வேண்டும். 5வது படியில் பறவைகள், விலங்குகளை பொம்மைகளை அடுக்க வேண்டும். ஆறாவது படியில் மனிதர்கள், மனிதர்களின் பழக்கவழக்கங்களான திருமணம், தொழில் போன்றவற்றின் பொம்மைகளை அடுக்க வேண்டும்.
7வது படியில் மகான்களாக கருதப்படும் விவேகானந்தர், வள்ளலார், ரமண மகரிஷி ஆகியோர் சிலைகளை வைக்க வேண்டும். 8வது படியில் இறைவனின் அவதார உருவங்களை வைக்கலாம். அஷ்டலட்சுமியின் சிலைகளையும் வைக்கலாம். 9வது படியில் முப்பெரும் தேவிகளாக கருதப்படும் பார்வதி தேவி. சரஸ்வதி, லட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகள், கோயிலுக்கு அழகு சேர்க்கும் கோயில் கலச கும்பத்தையும் வைக்கலாம். மேலும், அவர்களுடன் முழுமுதற்கடவுளான பிள்ளையார் சிலையையும் வைக்கலாம்.
கொலு பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம் எது?
நவராத்திரியின் முதல் நாளான நாளை கொலு பூஜையைத் தொடங்குவது சரியானது ஆகும். நாளை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கொலு பொம்மைகளை வைத்து விட வேண்டும். பின்னர், காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பூஜை செய்ய வேண்டும். நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களும் கொலுவிற்கு தினமும் மாலை 6 மணிக்கு மேல் தீபாராதனை காட்டி வழிபாடு செய்வது சிறப்பாகும்.
நவராத்திரி பண்டிகை நாளை தொடங்க உள்ள நிலையில், மகாளய அமாவாசை நன்னாளான இன்றே பலரும் கொழு பொம்மை வைத்து தங்கள் வழிபாட்டைத் தொடங்கிவிட்டனர்.
நவராத்திரியான 9 நாட்களும் அம்பிகையை வணங்கி அம்பிகையின் வெற்றியை கொண்டாடும் விதமாக 10வது நாளை விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. வரும் அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், வரும் 12ம் தேதி விஜயதசமியும் வருகிறது.