கடந்த மார்ச். 31ஆம் தேதி வெளியாகி விடுதலை படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில், நேற்று (ஏப்.06) விடுதலை படக்குழுவினர் நேற்று தேங்க்ஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர்.


நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, இயக்குநர் வெற்றிமாறன், ராஜீவ் மேனன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உள்ளிட்ட பலரும்  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர். அப்போது இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:


"இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதில் ரொம்ப ஈசியான விஷயம்  என்னவென்றால், இப்படி ஒரு படத்தை எடுக்கணும் என முடிவு செய்வது தான். ஏனென்றால் அது ஒரு தனி ஆளோ, சின்ன டீமோ சேர்ந்து எடுக்கும் முடிவு. ரூமில் உட்கார்ந்து பேசிவிடலாம். அடுத்த ஈஸியான விஷம் இந்தப் படத்தை தயாரிக்கலாம் என முடிவு செய்வது. ஒப்பிடுகையில் அதுவும் ஈஸி.


மிகப்பெரிய சவால்:


நாங்கள் எல்லாரும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளோம் என்றால் அதை நாங்கள் யாரும் சொல்லி செய்யவில்லை. இந்தக் கதையை சொல்ல விரும்பியதால், இந்தப் படத்துக்காக இதனையெல்லாம் செய்தோம். இப்படி ஒரு படம் வரும்போது அந்தப் படத்துக்கு பின்னே நிற்பது என நினைப்பது தான் பெரிய விஷயம். 


இந்த படத்தின் முதல் காட்சியின் இடைவேளையின் போதே மீடியாக்கள் ட்வீட் செய்வது தொடங்கி படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தனர். அதுதான் மிகப்பெரிய சவால்.


மக்களின் உணர்வு:


படத்தில் நிறைய குறைகள் உள்ளது. இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என பல விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி இந்தக் கதை, அது பேசும் கருப்பொருள், அதனுடைய உள்நோக்கம், எங்கள் குழு எவ்வளவு உழைத்துள்ளனர் என்பதை மதிப்பிட்டு குறைகளை பின்னுக்குத் தள்ளி, இது நல்ல படம், நீங்களும் பாருங்கள் என எல்லா மீடியாவும் ஆதரவளித்துள்ளனர். அதுவே மிகப்பெரும் பார்வை.


மக்கள் இந்தப் படத்தை அவர்களுடையது என ஃபீல் செய்கின்றனர். படத்தில் உள்ள வலி வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்து வெளிப்படுத்தியது. அந்த வலியை அவர்களுடைய வலியாகவும் அவர்களுடைய படமாகவும் எண்ணி கொண்டாடுவதும் பெருமைப்படுவதும் எங்களுடைய நன்றிக்கு உரியது. ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துக்கு நன்றி. வரைமுறைகளுக்குள் இல்லாத படம் இது.


இளையராஜாவிற்கு நன்றி:


நல்லவர்களை கதையின் நாயகனாக பார்த்து நிறைய நாட்கள் ஆகிறது. நாங்களே அதை எடுப்பதில்லை. அப்படி நல்லவர்களை கதையின் நாயகனாக வைத்து எடுத்த இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இரண்டாம் பாகம் பற்றி கேட்கும் அனைவருக்கும் நன்றி. 


இளையராஜா பற்றி சொல்ல வேண்டும். இளையராஜா தான் முதன் முதலில் படம் பார்த்துவிட்டு சொன்னார், இது பெரிய படமாக வரும். எல்லாரும் கொண்டாடரும் ஒரு படமாக வரும் என்று சொன்னார். “உனக்கு என்ன மாதிரி இசை வேண்டும் சொல் நான் பண்ணி தருகிறேன்” என்றார். பின்னணி இசைக்கு மிகக் குறைந்த நாட்கள் தான் நான் கொடுத்தேன். அதையும் பொறுத்துக் கொண்டு சிறப்பாக செய்து கொடுத்தார். அவருக்கு இந்த நேரத்தில் சிறப்பு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” எனப் பேசினார்.