சென்னையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், குகநாதன், தங்கர்பச்சான், வெற்றிமாறன், ராஜூ முருகன், அமைச்சர் மா.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முன்னணி இயக்குநர்கள் பார்வையில் தமிழ்நாட்டின் இயக்கம் டாக்டர் கலைஞர் என்ற தலைப்பில் வெற்றிமாறன் பேசியது கவனமீர்த்தது “கலைஞரின் வசனத்தில் வெளிவந்த பராசக்தி படம் அதிகாரம் இல்லாத, வசதி இல்லாத லட்சியங்கள் மட்டும் இருந்த இளைஞர்களால் எடுக்கப்பட்ட படம். அந்த படம் தமிழ்நாட்டில் இரு பெரும் சாதனையை நிகழ்த்தியது. ஒன்று தமிழ்நாட்டில் மதத்தை, சாதியை சொல்லி அரசியல் செய்ய முடியாது என்பதை நிரூபித்தது. மற்றொன்று தமிழ் சினிமாவுக்குள் சமூகத்துடன் உரையாடக்கூடிய அரசியல் படங்கள் வணீக ரீதியாக வெற்றி படங்களாக மாற கூடிய சூழல் ஏற்பட்டன.
இந்த சாதனை இந்தி உள்ளிட்ட மற்ற மொழி படங்களில் நிகழவில்லை. இன்றைய காலத்தில் சினிமாவின் மூலமாக அரசியலை விவாதிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. கதையாடல்கள், உரையாடல்கள் மூலம் அரசியல் பேசப்படுகிறது. நாம் கூறும் கருத்து கதைகளின் மூலம் பொய்கள் கட்டமைக்கப்படுகிறது. நாம் அதை தவிர்த்து நம் கதைகளையும், நம் மக்களுக்கான கதைகளையும் சொல்ல வேண்டும். அதற்கு முக்கியமான ஒரு தூண் தான் சினிமாவும் ஊடகமும். இந்த இரு துறைகளின் மூலம் அரசியல் விவாதம் முன்னெடுக்கப்படுகிறது. அதன் தொடக்கமாக பராசக்தி படம் உள்ளது” என்றார்.
தனது உரையில் உறுதியாக சாதாரணமாக தலையை எடுத்துவிடுவோம் என ஒருவர் பேசுவதை எப்பொழுதுமே, எங்குமே அனுமதிக்க கூடாது என குறிப்பிட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தேசிய அளவில் வைரலான நிலையில் அவரது தலையை வெட்டினால் பரிசாக ரூ.10 கோடி அளிக்கப்படும் என அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் பேசி இருந்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் தங்கர்பச்சான், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவருடைய வரலாறு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அலைபேசியிலும் சென்று நிற்கும்" என்றார்.
மேலும் படிக்க: Harold Das: லியோவின் மற்றொரு சாதனை... ஒரு மில்லியன் லைக்ஸ்களை பெற்ற ஹெரால்டு தாஸ்!