லியோ
நடிகர் விஜய் உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 2வது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் லியோ படத்தில் சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்தியு தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கும் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரோல்டு தாஸ்
கடந்த ஜூலை 29 ம் தேதி நடிகர் சஞ்சய் தத் தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு படத்தில் இடம் பெற்ற அவரது கேரக்டரான ”ஆண்டனி தாஸ்” கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுனின் 61 பிறந்த நாளன்று லியோ படத்தில் அவரது கதாபாத்திரமான ஹெரால்டு தாஸின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது .
இதில் கார் ஒன்றில் மிகவும் மிரட்டலாக வரும் அர்ஜூன் சாண்டி மாஸ்டர் கையை வெட்டுவது போலவும், அடுத்த காட்சியில் சிகரெட்டுடன் இருப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அர்ஜூனின் ட்ரேட் மார்க் டயலாக் ஆன “தெறிக்க” வும் இதில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி ஒரு மாதம் காலம் ஆகும் நிலையில் யூடியூபில் ஒரு மில்லியன் லைக்ஸைப் பெற்றுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நா ரெடி பாடலுக்கு கட்:
முன்னதாக யூடியூபில் வெளியாகி பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ரசிகர்களின் பேராதரவை பெற்றது இப்படத்தின் நா ரெடி பாடல். விஜய்யே இப்பாடலை பாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நா ரெடி பாடல் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதனை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் பாடலில் இருந்து பல்வேறு வரிகளை நீக்க உத்தரவிட்டுள்ளனர்.
நீக்கப்படும் வரிகள்:
தணிக்கை குழு வெளியிட்ட அறிக்கையின்படி, லியோ திரைப்படத்தின் நா ரெடி பாடலில் இருந்து “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்ட சியர்ஸ் அடிக்க”, “பத்தவச்சு பொகைய விட்டா பவரு கிக்கு, புகையல புகையல பவரு கிக்கு, மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளில வருவாண்டா” போன்ற வரிகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகளையும் பாடலில் இருந்து நீக்க தணிக்கை குழு அறிவுறுத்தியுள்ளது. இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.