நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் 'தலைவர் 171' படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, தான் என்றென்றும் உச்ச நட்சத்திரம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தன் அடுத்தடுத்த படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், செப்டெம்பர் 19ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் ரஜினிகாந்த் ‘தலைவர் 171’ படத்தின் இணைவதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தலைவர் 171 படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும், லியோ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தலைவர் 171 படத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக லோகேஷ் விலகியதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல் லோகேஷ் - ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.