அசுரன் படம் பார்த்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என்ன சொன்னார் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திருமாவளவனை நான் 2,3 சந்தர்ப்பங்களில் சந்தித்து உள்ளேன். 


முதல்ல அவரை பத்தி சொல்லணும்னா மிக எளிமையான மனிதர். ஒரு அரசியல் இயக்கத்தை நடத்தி வரும் நபர் இவ்வளவு சிம்பிளா ஒருத்தர் இருக்க முடியுமா என எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். நான் முதன்முதலாக அசுரன் படம் எடுக்கப்போகும் முன் அது அரசியல் ரீதியாக தப்பாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அவரிடம் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் போய் சந்தித்தேன். அப்போது அவரிடம் இதுபோன்ற ஒரு நிகழ்வை எடுக்கும் போது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கேட்டேன். 






அதற்கு தனிமனிதர்களால் சமூகத்திற்கு ஒரு தீர்வு வரும் என சினிமாவுல சொல்லாதீங்க.தொடர்ந்து அதே தவறதான் பண்றீங்க என குற்றம் சாட்டினார். மேலும் ஒரு அமைப்பாய் உங்கள் கதைக்குள்ள திரளுங்கள் என சொல்லிவிட்டு சில ஐடியாக்களை வழங்கினார். ஆனால் படம் எடுத்து முடித்த பின் பார்த்த அவர்  அதே குற்றச்சாட்டுகளை  முன் வைத்தார். ஆனால் சினிமாவில் சில விஷயங்கள் தவிர்க்க முடியாது என வெற்றிமாறன் தெரிவித்தார். 


மறக்க முடியாத அசுரன் 


கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான அசுரன் படத்தை வெற்றிமாறன் இயக்கிய நிலையில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் அறிமுகமானார். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் 2வது முறையாக பெற்றார். சாதிய ஆதிக்கத்தின் கொடூரத்தையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் பேசிய இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அனைவரையும் கைதட்ட வைக்கும்படி வசனங்களோடு அமைந்தது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.