சோழப் பேரரசர் ராஜராஜசோழன் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜேஷ், இளவரசு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  “தனது நண்பர் ஒருவர் செய்த ஆய்வில் எப்படி சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியது பற்றி தெரிவித்துள்ளார்.






அப்படி எடுத்ததன் விளைவு தான் தமிழ்நாடு இன்றளவும் இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற காரணிகள் ஊடுருவ முடியாத பக்குவத்தோடு இருப்பதாக நான் நினைக்கிறேன். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியம். நடுவில் சில காலம் அது எடுக்கப்படாமல் இருந்தது.






சினிமா என்பது மக்களை மிக எளிமையாக சென்றடையக் கூடிய கலை வடிவம் என சொல்லலாம். திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்த பின்பு தான், இலக்கிய துறையினர் “கலை கலைக்காக மட்டும் தான்..சினிமாவுக்கானது இல்லை” என கூறினர். கலையில் அழகியல் என்பது மிக முக்கியமானது. ஆனால் மக்களை சென்றடையாமல் எந்த கலையும் முழுமையடையாது.






இந்த கலையை சரியாக நாம கையாளணும். அப்படி கையாள தவறும்போது தான்  நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இது சினிமாவிலும் எடுக்குறாங்க. இதனை நாம காப்பாத்திக்கணும். அதற்கு அரசியல் தெளிவோடு இருந்து விடுதலைக்காக நாம போராடணும். அக்டோபர் 2 ஆம் தேதி நடக்கவிருந்த நிகழ்வே முன்னுதாரணம் என நினைக்கிறேன். அதற்காக நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். 


இதுதொடர்பான செய்திகள் பலரும் வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவும்,எதிர்ப்பும் தெரிவித்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெற்றிமாறன் பேசிய செய்தியை குறிப்பிட்டு, “சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்றால் இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்று தற்குறி சொல்லட்டும்” என கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.