பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி மறைந்தார். அவருக்கு வயது 70. உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


மே 16 ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில் இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் அவரது குடும்பத்தினர் எதையும் உறுதி செய்யவில்லை. விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதியாகும் போது தலைக்காயங்களுடன் அனுமதியாகியுள்ளார். அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்தின் தீவிரத்தால் உயிரிழந்திருக்கலாம் என்று உறவினர் ஒருவர் பெயர் குறிப்பிடாமல் கூறியுள்ளார். மருத்துவமனையில் தான் அவர் கீழே விழுந்தார் என்று இன்னொரு தரப்பு கூறுகிறது.


விஜயலட்சுமியின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் சினிமாவில் நடித்ததைவிட சீரியலில் அதிகம் நடித்துள்ளார். 


விஜயலட்சுமியுடன் நடித்துவந்த வீனா வெங்கடேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மிஸ் யு பிரின்சஸ், நான் விஜயலட்சுமி அம்மாவை அப்படித்தான் கூப்பிடுவேன். அவர் எல்லோருக்கும் இனிமையானவராக இருந்தார். அவரது மகள் கிரண் அவரை தாயுள்ளத்தோடு பேணி வந்தார். உன் இழப்புக்கு ஆறுதல் கூறுகிறேன். விஜி மா ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.


நடிகை விஜயலட்சுமி ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்தின் மூலம் அறியப்பட்டார். ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் புஷ்பா தங்கதுரையால் எழுதப்பட்ட ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதில் விஜயலட்சுமி, ஷ்வப்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.


ரஜினி, கமல் படங்களில் பெரும்பாலானவற்றில் அவர் தோன்றுவார். 1980களில் பரபரப்பான துணை நடிகையாக உலா வந்தார். பின்னாளில் சின்னத்திரையில் சீரியல் சூடுபிடிக்க அது அவரை ஸ்வீகரித்துக் கொண்டது. புகழ்பெற்ற சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார்.