நடிகர் ரஜினிகாந்த் உடன் அவர்கள், நடிகர் கமல்ஹாடனுடன் அவள் ஒரு தொடர்கதை, பட்டினத்தார், நான் அவனில்லை, வளர்பிறை உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை லீலாவதி உடல்நலக்குறைவால் இன்று (டிச.08) காலமானார். 


 



 


85  வயதான பழம்பெரும் நடிகை லீலாவதி, உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் குறைநத ரத்த அழுத்தம் காரணமாக நெலமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் நடிகை சுஜாதாவின் தாயாராக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டவர் நடிகை லீலாவதி. தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மொழி படங்கள் என 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 


உடல்நல குறைவு :


நடிகை லீலாவதியின் மகன் வினோத் ராஜூவும் ஒரு நடிகராவார். பெங்களூருவை அடுத்த சோலதேவனஹல்லி என மலைப்பகுதியில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக பல ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் படுத்தப்படுகையாக இருந்து வந்தார். இந்த நிலையில் தான் இன்று மதியம் அவரின் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


டாக்டர் பட்டம் :


நடிகை லீலாவதி முன்னணி நடிகர்களான ராஜ்குமார், என்.டி. ராமராவ், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கமல்ஹாசன், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், சுதீப் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 2008ம் ஆண்டு தும்கூர் பல்கலைக்கழகம் இவரின் கலைப்பயணத்தை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 


பழம்பெரும் நடிகை லீலாவதியின் மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவரது குடும்பத்தாருக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.