வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பிரபல காமெடி ஆன பரோட்டா காமெடியில் ஹரிவைரவன் நடித்துள்ளார். பிரபல பரோட்டா காமெடியில் நடிகர் சூரி கடைக்காரரிடம் சென்று பந்தயத்துக்கு நாங்க வரலாமா என்று கேட்பார். அப்போது கடைக்காரர் இவனைத் தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என்று கூறுவார்.அந்த இவனைத் தவிர… அந்த நபர் தான் நடிகர் ஹரிவைரவன். இவரது நேர்காணல் ஒன்று தனியார் சேனலில் சமீபத்தில் வெளியானது. அதில் இவரின் தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும் பொழுது இவருக்கா இந்த நிலைமை என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது. 




ஹரிவைரவனின் உடல்நிலை :


சர்க்கரை வியாதி, இதய நோய், இரண்டு கிட்னிகளும் செயலிழப்பு என உடல் முழுக்க பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு இன்று நடக்க கூட முடியாமல் மனைவியின் துணையுடன் ஒவ்வொரு நாளையும் கழித்து வருகிறார் ஹரிவைரவன். உடல்நல பாதிப்புகள் மட்டுமின்றி உடல் பிரச்சினைகளால் ஏற்பட்ட மன பாதிப்புகளாலும் அவதிப்பட்டு  வருகிறார். இவரால் சாதாரண வாழ்க்கையை வாழ முடியவில்லை. கை, கால், முகம் என வீக்கங்கள்;  நிலையாக நிற்க முடியாது! மனைவியின் துணையின்றி ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை. 




என்ன ஆனாலும் சரி; இவர்‌ எனக்கு முக்கியம்! 


இவரது மனைவி கவிதா இவரை பராமரித்து வருகிறார். ஹரிவைரவன் கவிதா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இவரது உடல் பாதிப்பு குறித்து அவரது மனைவி கவிதா கூறுகையில், பதினொரு ஆண்டுகளாக இவருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. உடலில் இல்லாத வியாதிகளே இல்லை. அந்தந்த வியாதிகளுக்கு தற்காலிக மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தி வந்தோம் எனக் கூறுகிறார். இதனிடையே கடந்த ஆண்டு முதல் ஹரிவைரவனின் உடல்நிலை மோசமானதாகவும், மருத்துவர்கள் வெறும் ஆறு மாதங்கள் தான் என் கை விரித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் வீட்டில் இருந்த பணம் நகைகளை வைத்து கடந்த பத்து மாதங்கள் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது செலவுக்கு பணம் நகை என எதுவும் இல்லாமல் சிகிச்சை பெற முடியாத நிலையில் இருப்பதாக கூறுகிறார்.


பயம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்:


மேலும் இவர் தன்னை கருணை கொலை செய்ய சொல்லி தன் மனைவியிடம் கேட்டதாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். இதுகுறித்து நடிகர் ஹரிவைரவன் கூறும் பொழுது, என்னால் என் மனைவி அவஸ்தைப் படுவதை பார்க்க முடியவில்லை, ஒரு அடி கூட துணையில்லாமல் எடுத்து வைக்க முடியவில்லை. நான் அவரை சிரமப்படுத்துவதாக தெரிகிறது என்று கூறுகிறார். மேலும் தன்னுடைய பயம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் கூறியுள்ளார்.


கணவனின் நிலை இவ்வாறாக இருக்க என்ன ஆனாலும் சரி அவர் அருகே உறுதுணையாக நான் இருக்க வேண்டும்; இவர்‌ எனக்கு முக்கியம்!  என்று கண்ணீர் வடித்தார் அவரது மனைவி கவிதா.