கோட் (G.O.A.T)


 நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி வருகிறது கோட் (G.O.A.T). வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கி  ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தந்தை மகன் என இரு கதாபாத்திரங்கள் விஜய் இந்தப் படத்தி நடித்து வருகிறார்.


தொடர்ச்சியான அப்டேட்கள்


2024 ஆம் ஆண்டு தொடங்கியது முதல், கோட் படத்தின் அப்டேட்களை வரிசையாக படக்குழு வெளியிட்டு வருகிறது. புத்தாண்டை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. கோட் படத்தின் கதை பற்றிய தகவல்களை இதுவரை பயங்கர ரகசியமாக படக்குழு பாதுகாத்து வருகிறது. மறுபக்கம் ரசிகர்கள் இந்தப் படத்தின் கதை பற்றி பல அனுமானங்களை முன்வைத்து வருகிறார்கள். 


தளபதி பொங்கல்


சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில்  முற்றிலும் புதிதாக கெட் அப்பில் நடிகர் விஜய் காணப்பட்டார். தற்போது பொங்கல் பண்டிகையை ஒட்டி கோட் படத்தின் அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. தனது எக்ஸ் தளத்தில் இந்த பொங்கல் சிறப்பான ஒரு பொங்கலாக இருக்கப்போகிறது என்று பதிவிட்டுள்ளார்.






இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தனது எக்ஸ் பக்கத்தில் ‘ நிச்சயமாக இது தளபதி பொங்கல் ‘ என்று பதிவிட்டுள்ளார். நாளை பொங்கல் பண்டிகையை ஒட்டி படத்தின் சிறப்பு அப்டேட் ஒன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.