சாதி, மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழர் அனைவரும் கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.


பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி:


இந்த நிலையில், மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில் இன்று பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடப்பட்ட பெங்கல் விழாவில் பிரதமர் மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பெங்கல் விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, "ஒற்றுமையின் உணர்வுபூர்வமான தொடர்பை பாஜக அரசின் காசி - தமிழ் சங்கமம், காசி - சௌராஷ்டிர சங்கமம் ஆகிய திட்டங்களில் காணலாம். இந்த திட்டங்களில் புவியியல் ரீதியாக தனித்தனியான பகுதிகளுக்கு இடையேயான தொடர்புகளை கொண்டாட முடியும்.


இந்த ஒற்றுமை உணர்வுதான் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதத்தைக் கட்டமைக்க மிகப்பெரிய சக்தியாகும். டெல்லி செங்கோட்டையில் நான் முன்னிறுத்திய 'ஐந்து உறுதிமொழிகள்' நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த முக்கிய அம்சம் ஆகும்" என்றார்.


திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி:


தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, "பொங்கலின் போது, ​​கடவுளுக்கு புதிய பயிர் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பாரம்பரியத்தின் மையப்புள்ளியாக விவசாயிகளை முன்னிறுத்துகிறது. தினை பற்றி ஒரு புதிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பல இளைஞர்கள் தினைகளை வைத்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். 


தினை விவசாயத்தை மேற்கொள்ளும் மூன்று கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தினையை ஊக்குவிப்பதன் மூலம் நேரடியாக பயனடைந்தனர். இந்தியாவின் ஒவ்வொரு பண்டிகைக்கும் கிராமப்புறம், பயிர் மற்றும் விவசாயிக்கும் தொடர்புள்ளது. பொங்கல் திருநாளில் தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்" என்றார்.






பாஜக மேலிட நிர்வாகிகள், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை தவிர நடிகை மீனாவும் இந்த பெங்கல் விழாவில் கலந்துகொண்டார். குறிப்பாக, நடிகை மீனாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.