அரசுப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள மற்றும் பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை, TNSED செயலி வழியே பதிவு செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பழுதடைந்த கட்டிடங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.


கட்டிடங்கள் கள ஆய்வு


முன்னதாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகளில், கட்டிடங்கள் எவ்வாறு உள்ளன என்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை ஒருங்கிணைந்த கல்விப் பொறியாளர்கள் மேற்கொண்டனர்.


இதன் அடிப்படையில், பள்ளிகளில் பழுதான, இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் இதர கட்டிடங்களின் விவரங்கள் TNSED பள்ளிக்கல்வி செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தேவையற்ற கட்டிடங்களை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தற்போதைய நிலையை பதிவேற்றம் செய்ய வேண்டும்



இந்த நிலையில், இப்பணிகளின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளவும், அதற்கேற்ப தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, TNSED பள்ளிக்கல்வி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் தற்போதைய நிலையை, அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய விவரங்களுடன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.


* முதலில் TNSED செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில்  பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


* தலைமை ஆசிரியர்கள் கேட்கப்படும் தகவல்களுக்கு சரியான பதில் அளித்து, அதற்குரிய புகைப்படங்களையும் பதிவேற்ற வேண்டும்.


* கூடுதலாக வேறு ஏதேனும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் எனில், அதுகுறித்த விவரங்களையும் தெரிவிக்கலாம்.


தொடர்ந்து ஆய்வு




* அதேபோல, மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்களின் நிலையை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். இடித்து முடித்து அவற்றை அகற்றுவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.


மேலும், இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்படுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநரும் தொடக்கக் கல்வி இயக்குநரும் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.


முன்னதாக, அரசுப் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர் ஒருவர் பலியான நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள மற்றும் பழுதடைந்த கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, இடிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.