கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.  கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் இது மூன்றாம் திரைப்படம். இவர்களது கூட்டணியில் வெளியான  ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும்  ‘அச்சம் என்பது மடமையடா’ படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் இந்தப்படத்தின் மீது படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. திரைப்படம் இன்று காலை 5 மணி அளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர். 






வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பு பெரும் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது.மேலும் மெதுவான திரைக்கதை என்றாலும் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை அதனை ஈடு செய்து விட்டது. பின்னணியில் பிரமிக்க வைத்துள்ளார் ஏ ஆர் ரகுமான் என ரசிகர்கள் ரஹ்மானை கொண்டாடி வருகின்றனர். படத்தில் பஞ்சத்தில் அடிபட்ட கிராமத்து இளைஞன், தலைவனை பாதுகாக்கும் பாடிகார்டு, கேங்ஸ்டர் என மூன்று பரிணாமங்களில் கலக்கியிருக்கிறார் நடிகர் சிம்பு. ஒவ்வொரு கேரக்டருக்கும் அவர் கொடுத்த வேரியேஷன் சிலம்பரசன் என்பவன் எப்படிப்பட்ட நடிகன் என்பதை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு சொல்லி இருக்கிறது. படத்தை கொண்டாடி வரும் ரசிகர்கள் இதே காம்போவில் வெளியான மாபெரும் காதல் காவியமான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் காட்சி ஒன்றை மீண்டும் டிரெண்டாக்கி வருகின்றனர். 






நடிகர் சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா…நவீன கால காதலர்களின் காவியமாக விளங்கும் இந்த திரைப்படம் மெகா ஹிட் ஆனது. த்ரிஷாவிற்கு ஜெசி என்ற அங்கீகாரத்தையும் பெற்று தந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு இன்ஜினியரிங் பட்டதாரியாக இருந்து பின் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஓர் இளைஞராக காட்சிப்படுத்தப்பட்டு இருப்பார்.அந்த திரைப்படத்தின் காட்சி ஒன்றில் படம் எடுக்கும் முன் விடிவி கணேசிடம் சிம்பு கூறும் கதை ஒன்று தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவை பதிவிட்டு அப்போ புரியல இப்போ புரியுது… என்று நடிகர் சிம்புவின் ஸ்டைலில் டைம் டிராவல் என குறிப்பிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் இயக்குநர்கள் தங்களது படங்களின் ரெஃபரன்ஸ் வைப்பது வழக்கம். அதுபோல கௌதம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலேயே வெந்து தணிந்தது காடு படத்தில் ரெஃபரன்ஸை வைத்து விட்டார் எனக் கூறி வருகின்றனர் இணையவாசிகள்.