தேசிங்கு ராஜா


அஜித் நடித்த ராஜா, விஜயின்  துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எழில். கடந்த 2013-ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்த தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார்.  பிந்து மாதவி, சூரி, சிங்கம் புலி உள்ளிட்டவர்கள் இப்படத்தில்  நடித்திருந்தார்கள். டி. இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். 


பொதுவாகவே காமெடி சப்ஜெக்ட்களில் தனித்துவமான ரசனையைக் கொண்ட இயக்குநர் எழில். இவர் இயக்கிய படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் அதிகம் கவனம் ஈர்த்துள்ளன, குறிப்பாக தேசிங்கு ராஜா படத்தில் நடிகர் சூரி மற்றும் சிங்கம் புலி காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.  இப்படம்  திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. 


தொடர் தோல்விகள்


தேசிங்கு ராஜா படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கிய சரவணன் இருக்க பயமேன், வெள்ளக்கார துரை ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. அதே நேரத்தில் நடிகர் விமல் நடித்த படங்களும் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெறவில்லை. தேசிங்கு ராஜா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.


தேசிங்கு ராஜா 2






எழில் இந்தப் படத்தை இயக்க, விமல் கதாநாயகனாக நடிக்கிறார். இன்ஃபினிடி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ஆர் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் 17-ஆம் தேதி முடிவடைந்துள்ளது. படம் குறித்து இயக்குநர் எழில் ஒரு சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாவது பாகத்தில் காமெடி அதிகம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. அதனால் இதில் சூரி நடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கல்லூரியில் சேர்ந்து படித்த மூன்று நண்பர்கள் பல வருடங்களுக்குப் பிறகு பார்த்துக் கொள்கிறார்கள். அதில் ஒருவர் மட்டும் போலீஸாக இருக்கிறார் மற்ற இருவரும் திருடர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையில் நடப்பதே கதை என இயக்குநர் எழில் தெரிவித்துள்ளார்