வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ திரைப்படம் வெளியாகி மூன்றே நாள்களில் 100 கோடி வசூலை வாரிக்குவித்து சல்மான் கானின் மாஸ் மார்க்கெட்டை மீண்டும் நிரூபித்துள்ளது.


நடிகர் சல்மான்கான், நடிகை பூஜா ஹெக்டே, டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் குடும்ப ஆக்‌ஷன் எண்டெர்டெய்னராக சென்ற ஏப்ரல் 21ஆம் தேதி வெளியான  திரைப்படம் ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’.


ரமலான் சிறப்பாக ஆண்டுதோறும் வெளியாகும் சல்மான் கான் ஸ்பெஷல் படங்களின் வரிசையில் இந்த ஆண்டு ‘கிஸி கா பாய் கிஸி கி ஜான்’ வெளியாகி அவரது ஹிட் லிஸ்டில் இந்தப் படமும் இடம்பெற்றுள்ளது.


தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் 9 ஆண்டுகளுக்கு முன் 2014ஆம் ஆண்டு பொங்க வெளியீடாக வந்த வீரம் திரைப்படத்தில் அஜித் -தமன்னா நடிக்க சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். நடிகர்கள் விதார்த், சந்தானம், அப்புக்குட்டி, வித்யுலேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், அப்போதே தெலுங்கில் ‘வீருடோக்கடே' என்ற பெயரிலும், இந்தியில் ‘வீரம் தி பெர்மன்’ என்ற பெயர்களில் டப்பிங் செய்யப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. 


இந்நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதிகாரப்ப்பூர்வமாக ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்தப் படம், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜெகபதி பாபு, சித்தார்த் நிகம், பூமிகா, ஷெஹ்னாஸ் கில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் ராம் சரண், பாக்யஸ்ரீ, யோ யோ ஹனி சிங் ஆகியோர் சிறப்புக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கேஜிஎஃப் புகழ் ரவி பர்சூர் இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ள நிலையில், பாடல்களை ஹிமேஷ் ரேஷ்மியா, சஜித் கான், ரவி பர்சூர், தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்


150 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஃபர்ஹான் சம்ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சல்மான் கானின் சல்மான் கான் ஃபில்ம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 


படம் வெளியாகி இன்றுடன் நான்கு நாள்கள் ஆகும் நிலையில், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றும் வணிகரீதியாக தொடர்ந்து ஏறுமுகத்திலும் பயணித்து வந்தது.


இந்நிலையில், கிஸி கா பாய் கிஸி கி ஜான் திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தம் 112.8 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை சல்மான் கான் ஃபில்ம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.


 






சென்ற இரு ஆண்டுகளாக சரிந்து கொண்டிருந்த பாலிவுட் மார்க்கெட்டை இந்த ஆண்டு நடிகர் ஷாருக்கான் நடிப்பில் குடியரசு தின ஸ்பெஷலாக வெளியான பதான் திரைப்படம் தூக்கி நிறுத்தி இந்தி திரையுலகினரை ஆசுவாசப்படுத்தியது. பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 1050 கோடிகளுக்கும் மேல் வசூலித்தும், இந்தியாவில் இதுவரை அதிகம் வசூலித்த இந்தி திரைப்படம் எனும் சாதனையையும் படைத்து லைக்ஸ் அள்ளியது.


மேலும் இதுவரை அதிகம் வசூலித்த இந்தியப் படங்களின் பட்டியலில் 2016ஆம் ஆண்டு வெளியான நடிகர் ஆமீர் கானின் டங்கல் படம் 2000 கோடிகள் என்ற இலக்குடனும், யாரும் நெருங்க முடியாத சாதனையுடனும் சிம்மாசனத்தின் உச்சியில் அமர்ந்துள்ளது.


இந்த வரிசையில் ஏற்கெனவே சல்மானின் பஜ்ரங்கி பைஜான், சுல்தான் படங்கள் முறையே 6ஆவது, 10ஆவது இடங்களைப் பிடித்துள்ளன. இந்த வரிசையில் கிஸி கா பாய் கிஸி ஜான் படமும் இடம்பெறும் என எதிர்பார்த்து சல்மான் கான் ரசிகர்கள் காத்துள்ளனர்.