சொன்னது ஒரு வேலை, கொடுப்பது ஒரு வேலை, அடித்து வேலை வாங்குவதாக மலேசியாவில் இருந்து குரல் பதிவு அனுப்பிய வாலிபர். கணவரை மீட்டு தர வேண்டுமென கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி புகார் மனு அளித்தார்.

 

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசி வயது 40. இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகிறது. இவர் திருவாரூரில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தியாகராஜன் என்பவர் மூலம் மலேசியாவிற்கு  சூப்பர் மார்க்கெட்டில் பேக்கிங் வேலைக்காக சென்றுள்ளார். மேலும் அங்கு அவருக்கு மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் என்றும் தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று தியாகராஜன் கூறப்படுகிறது.



 

இந்த நிலையில் அங்கு அவருக்கு 27 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாகவும் மேலும் உணவு தங்கும் இடம் போன்றவற்றுக்கு தாங்களே செலவு செய்து கொள்ள வேண்டும் என்றும் விசாவிற்காக மாதம் 6500 ரூபாய் பணம் பிடித்துக் கொள்ளப்படும் என்று கூறுவதாகவும் ஏற்கனவே கழுத்து எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ள தன்னால் மூன்றாவது மாடி வரை சுமை தூக்கி செல்ல முடியவில்லை என்றும் தன்னை எப்படியாவது இங்கிருந்து காப்பாற்று மாறும் வேலைக்கு வரவில்லை என்றால் முதலாளி அடிப்பதாகவும் தனது நண்பருக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து துளசியின் மனைவி வித்தியா தனது 4 வயது ஆண் குழந்தை மற்றும் எட்டு மாத பெண் குழந்தையுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், தனது கணவரை அதிக சம்பளம் தங்குமிடம் உணவு இலவசம் என்று அழைத்துச் சென்றுவிட்டு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத அவரை சுமை தூக்குவது போன்ற கடுமையான வேலைக்கு ஈடுபடுத்தி வருவதாகவும் எனவே அங்கிருந்து அவரை மீட்டுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.