ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனம் இருந்தால் நான் விஜய்யின் அரசியலை கண்டிப்பாக வரவேற்பேன் என தமிழர் முன்னேற்ற படைத் தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தற்போது 68வது படத்தில் நடித்து வரும் அவர், இன்னும் ஒரு படத்துடன் சினிமாவுலகில் இருந்து விலகி முழுநேர மக்கள் பணியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடர்பான அறிக்கையில், “அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வேட்கை” என தெரிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து அரசியல், திரையுலக பிரபலங்கள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 


அந்த வகையில் தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமி விஜய்யின் அரசியல் பற்றி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு வருடத்துக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மோவூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய்யின் தீவிர ரசிகையான சிறுமி ஒருவர் 5 இளைஞர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதை தன் உறவினர்களிடம் சொல்ல பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். அச்சிறுமி வீடியோ வாயிலாக விஜய்க்கு நடந்த சம்பவத்தை சொல்லி, தான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் தன்னிடம் சிகிச்சைக்கு பணமில்லை. அதனால் உதவி செய்து என்னுடைய உயிரை காப்பாத்துங்கன்னு வீடியோ வாயிலாக விஜய்க்கு கோரிக்கை விடுத்தார். அது அனைத்து ஊடகங்கள் வாயிலாகவும் வெளியானது.


அப்போது நடிகர் விஜய் அவர்கள் நேரடியாக அந்த சிறுமிக்கு உதவி செய்யவில்லை. அந்த உள்ளூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் போட்டு ரூ.50 ஆயிரம் கொடுத்தார்கள். அது சில காலம் மட்டுமே மருத்துவ உதவிக்கு பயன்பட்ட நிலையில் அந்த சிறுமி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்தாள்.


நான் விஜய்யிடம் கேட்பது என்னவென்றால், ‘உங்ககிட்ட இருக்கும் பணம் உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்றால் தமிழ்நாட்டில் எங்கெங்கு கூரை வீடு இருக்கிறதோ அதையெல்லாம் மாற்றி கல்வீடு கட்டித்தர மனம் இருக்கிறதா? . தீக்காயம் அடைந்த சிறுமிக்கு உதவ முடியவில்லை. சினிமாவில் தன்னுடைய 47 வருட இளமை காலத்தை எல்லாம் சொகுசாக வாழ்ந்து விட்டு அவர் சேர்த்து வைத்த பணத்தை பாதுகாக்க அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனம் இருந்தால் நான் விஜய்யின் அரசியலை கண்டிப்பாக வரவேற்பேன்.வாழ்த்துவேன்" என வீரலட்சுமி தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: நடிகர் விஜய் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் - KPY பாலா