திருச்சி மாநகரில் மாநில அளவிலான யோகாசனம் போட்டி செழியன்'ஸ் கலைகோவில் யோகாலயம் சார்பாக நடைபெற்றது. இந்த போட்டிய குறித்து செழியன் கூறியதாவது: நமது உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சுப்பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவிசெய்கிறது. மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் யோகாசனம் நமக்கு உதவுகிறது. தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்க முடியும். யோகா செய்பவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலம் பெறும். மேலும் நன்றாக சுவாசிக்க முடியும். இதயம் சரியாக இயங்கி உடல்நலத்தை மேம்படுத்துகிறது. உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், ஊளைச்சதை எனப்படும் தேவையற்ற சதைகள் கரைந்து அழகான ஃபிட்டான உடல் அமைப்பை பெறுவதற்கு யோகா உதவிசெய்கிறது. தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மேலும் நாம் பதட்டம் இல்லாமல் மனஅமைதி அடையவும், தெளிவாக சிந்திக்கும் திறனையும் பெற யோகாசனம் உதவுகிறது.




அதிகப்படியான வேலைப்பளு, குடும்பப்பிரச்சினை மற்றும் பிற காரணங்களால் பலரும் மனஅமைதியை இழந்து சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே தினமும் யோகாசனம் செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் நீங்குகிறது. யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுகின்றோம். இதனால் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு நோய் நொடியின்றி நீண்ட நாட்கள்வாழவும் உதவுகிறது. ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதாலும் தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருவதாலும் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியத்தை பெறமுடியும்.


இந்நிலையில் யோகாசனத்தை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் திருச்சி சுப்பிரமணியம் புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செழியன்'ஸ் கலைக்கோவில் யோகாலயம் சார்பாக 14 வது தமிழ்நாடு மாநில அளவிலான யோகா சனம் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கன்னியாக்குமரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள், மற்றும் இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர். 




இந்த போட்டியில் 4 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். இதில் யோகா சனத்தில் உள்ள அனைத்து கலைகளையும் செய்து, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் மாணவ,மாணவிகள் செய்து காட்டினர்.  இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் கோப்பைகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. குறிப்பாக அனைத்து பிரிவுகளிலும் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு தனியாக சிறப்பு போட்டிகள் வைக்கபட்டது. இதில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.