வீர தீர சூரன்


அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. துஷாரா விஜயன் , எஸ்.ஜே சூர்யா , சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் நடிகர் விக்ரம் பற்றி சூரஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.


விக்ரமுடன் செல்ஃபீ எடுத்த தருணம்


" நான் ஒரு நடிகரோடு முதல் முறையாக செல்ஃபீ எடுத்தது விக்ரமுடன் தான். மஜா படத்தின் படப்பிடிப்பின் போது நானும் எனது மனைவியும் சேர்ந்து அவருடன் செல்ஃபீ எடுத்துக் கொண்டோம். நான் சினிமாவிற்கு வந்த பிறகு ஒருமுறை சிங்கப்பூரில் விமானத்திற்காக காத்திருந்தேன். அப்போது என் அருகில் ஒருவர் வந்து நான் உங்களோட பெரிய ரசிகன் ஒரு ஃபோட்டோ எடுக்கனும் என்று சொன்னார். நிமிர்ந்து பார்த்தால் விக்ரம். அவர் என்னுடைய படங்களுக்குர் ரசிகர் என்று சொன்னது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. "


விக்ரம் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - சூரஜ் வெஞ்சமூடு 


" என் வீட்டில் என் அப்பா மிலிட்டரி. என் அண்ணன் மிலிட்டரி. நான் ஒருத்தன் மட்டும் தான் மிமிக்ரி. சினிமாவிற்கு வர வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் கை உடைந்துவிட்டது. இதை வைத்து என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தான் விக்ரம் சாரின் வீடியோக்கள் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. காலில் அடிபட்டு இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர் சொன்னபிறகும் தனது ஆர்வத்தால் இவ்வளவு பெரிய நடிகராக நிற்கிறார். விக்ரம் மாதிரியான ஒரு நடிகரை நான் இதுவரை பார்த்ததே இல்லை.


இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு இரவில்தான் நடந்தது. மாலை ஆறு மணிக்கு விக்ரம் சார் வருவார். செட்டிற்குள் வந்த பிறகு கடைசியாக செல்பவர் அவர்தான். மற்ற நடிகர்கள் செட்டில் நடந்து வந்தால் சுற்றி இருப்பவர்கள் அவரைப் பார்த்து மரியாதையாக விலகி நிற்பார்கள். ஆனால் விக்ரம் செட்டிற்குள் வந்தால் தேனீக்கள் மாதிரி எல்லாரும் அவரைச் சுற்றி நிற்பார்கள். படத்தில் வேலை செய்யும் ஒவ்வொருத்தரின் பெயரையும் நியாபகம் வைத்து அவருடன் பேசுவார். அப்படி யாராவது அவரை பார்க்க வரவில்லை என்றால் இவரே அவரை கூப்பிட்டு பேசுவார். இந்த மாதிரியான ஒரு நடிகரை இதுவரை பார்த்ததே இல்லை. விக்ரம் சாருக்கு மும்பையில் இருந்து மேக் அப் ஆர்டிஸ் வந்திருப்பார். ஆனால் மற்ற எல்லாருக்கும் விக்ரம் சார் தான் மேக் அப் பார்ப்பார்.  " என சூரஜ் வெஞ்சமூடு தெரிவித்துள்ளார்.