இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் நேற்று (மார்ச்.31) திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ள விடுதலை படம் அரசியல் தலைவர்களையும் கவரத் தவறவில்லை.
திருமாவளவன் எம்.பி ட்வீட்
அந்த வகையில் முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், எம்பி, தொல். திருமாவளவன் முன்னதாக விடுதலை திரைப்படத்தையும் இயக்குநர் வெற்றிமாறனையும் வெகுவாகப் பாராட்டி தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"தோழர் வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது. அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது.
ஆழமான உரையாடல்
மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது.
தோழர் வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். வெல்க விடுதலை!” என தொல். திருமாவளவன் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
விடுதலை படத்தை முதல் நாளே பார்த்துவிட்டு பாராட்டி திருமாவளவன் ட்வீட் செய்துள்ளது வெற்றிமாறன் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாராட்டு மழை
சமூக வலைதளங்களில் தொடர்ந்து நெட்டிசன்களின் பாராட்டு மழையில் நனைந்து வரும் விடுதலை திரைப்படம், நடிகர் சூரிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்து லைக்ஸ் அள்ளி வருகிறது. பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி போராளியாக குறுகிய பகுதியே படத்தில் வரும் நிலையில், அடுத்த பாகத்தில் அவரது கதாபாத்திரத்தின் எழுச்சியை முழுமையாகக் காண விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
நடிகை பவானி ஸ்ரீ, நடிகர்கள் ராஜீவ் மேனன், கௌதம் மேனன், தமிழ், சேத்தன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள நிலையில், கதாபாத்திரங்களில் பொருந்திய அனைவரது நடிப்பும் பாராட்டுகளை அள்ளி வருகிறது.
சுமார் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விடுதலை படம் முதல் நாளே உலகம் முழுவதும் 8 கோடிகளை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.