மழை வெள்ளத்தில் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இயக்குநர் மாரி செல்வராஜை விமர்சித்தவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., ஆளூர் ஷா நவாஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். 


குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டித் தீர்த்தது. இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் கூட எதிர்பாராத மழையின் அளவு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை புரட்டிப் போட்டது. 


24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்து மறுகால் பாய்ந்தது. முன்னெச்சரிக்கையாக 5 அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எங்கு பார்த்தாலும் தண்ணீரால் சூழப்பட்டதால் மீட்பு பணிகள் நடைபெறுவதில் மிகப்பெரிய சிக்கல் எழுந்தது. தண்ணீர் வேகமாக சென்றதால் மீட்பு குழுவினர் படகில் சென்றாலும் பலனளிக்காத நிலையே ஏற்பட்டது. 


இதனிடையே திருநெல்வேலி அருகேயுள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் தன்னுடைய சொந்த கிராமம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் இயக்குநர் மாரி செல்வராஜ் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அவரின் மனைவியும் சமூக வலைத்தளங்களில் உதவி பெறுவது தொடர்பான தகவல்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அமைச்சர் உதயநிதி இந்த பகுதிகளை பார்வையிட வந்தபோது அவருடன் மாரி செல்வராஜ் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. 






இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாரி செல்வராஜூக்கு ஆதரவாக விசிக எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார். ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்கு சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார். வெறுப்பு அரசியல்!” என தெரிவித்துள்ளார்.