பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு, துணிவு படத்தின் தியேட்டர் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. 


கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை படத்திற்கு பிறகு போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.  ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






இதேபோல பொங்கலுக்கு நடிகர்  விஜய் நடிக்கும் வாரிசு படம் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதனிடையே கடந்த  சமூக வலைத்தளங்களில் பல தியேட்டர்கள் பொங்கலுக்கு தங்களது திரையரங்கில் துணிவு படம் வெளியாவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாக பதிவுகளை வெளியிட்டனர். இதனால் தங்களது ஊர்களில் எந்தெந்த தியேட்டர்களில் படம் ரீலிசாகப் போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 


இதேபோல் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நேர்காணல்களில் அவரிடம் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் தலையீட்டால் வாரிசு படத்தை விட துணிவுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளதாமே என கேள்வி கேட்கப்பட்டது. அதனை மறுத்த உதயநிதி அப்படியெல்லாம் இல்லை. இரு பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் சமமான தியேட்டர்கள் தான் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அதேசமயம் மொத்தமுள்ள 1200 தியேட்டர்களில் 700 துணிவு படத்துக்கும், 500 வாரிசு படத்துக்கும் கிடைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. 






ஆனால் இதனை மறுத்துள்ள திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு, வாரிசு என எந்த படத்திற்கும் இதுவரை திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம் இரு படங்களின் ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.