இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் பிரமாண்ட படைப்பான அவதார்-2  படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 


கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் வெளியாகி உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபீஸில் சுமார் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்து சாதனைப் படைத்த இப்படம், ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. 






முன்னதாக அவதார் படம் 5 பாகங்களாக  2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய இப்படத்தின் 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர்  படம் டிசம்பர் 16 ஆம் தேதி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 






இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. கடலில் வாழும் உயிரினங்களையும், கனிம வளங்களையும், பாதுகாக்கும் நவி இன மக்கள் குறித்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. பலரும் படத்தை பெரிய எதிர்பார்ப்புடன் பார்க்க காத்திருக்கும் நிலையில் அவதார் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 


முதல் பாகத்தில் அவதார் உலகத்தில் டிராகன் போன்ற உயிரினத்தில் ஜேக் சவாரி செய்யும் காட்சிகள் போன்றே இந்த படத்திலும் ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் ட்ரெய்லரை போலவே கிராபிக்ஸ் காட்சிகள் வாயை பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக உள்ளது. ஆக மொத்தம் முதல் பாகத்தை விட இப்படம் அதிக அளவில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.