பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். 


கடந்த  டிசம்பர் 31 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் ட்ரெய்லர் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றது. இதன் பிறகு, விஜய் ரசிகர்கள் வாரிசு ட்ரெய்லர் குறித்த அறிவிப்புக்காக ஏங்கி வந்தனர். முன்னதாக, ஜனவரி 2 ஆம் தேதி வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என சொல்லப்பட்டது.



ஆனால் துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காரணத்தினால், அதை விட சிறந்த ட்ரெய்லரை கொடுக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்ததாகவும் அத்துடன், எடிட் செய்ப்பட்டிருந்த ட்ரெய்லரை மீண்டும் எடிட் வேலைக்காக அனுப்பியதாகவும், இதனால்தான் ட்ரெய்லர் ரிலீஸ் தள்ளிப்போனதாகவும் ஒரு தகவல் கிளம்பிய நிலையில், இதனை படக்குழு மறுத்தது. 


மேலும் அனைவரும் எதிர் பார்த்து கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. அதற்கேற்றவாறு, தற்போது வாரிசு படத்தின் ட்ரெய்லரானது சன் டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.


வாரிசு படத்தின் பாடல்கள் :


முதலில், ரஞ்சிதமே பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ஒரு சில நாட்களிலேயே அந்தபாடல் வைரலானது. அடுத்ததாக, 30 ஆண்டு கால விஜய்யின் சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, தீ தளபதி பாடல் வெளியிடப்பட்டது. இந்தபாடலை நடிகர், சிம்பு பாடி அசத்தினார். இதனையடுத்து சின்ன குயில் சித்ரா பாடிய சோல் ஆஃப் வாரிசு பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. பின்னர், வா தலைவா மற்றும் ஜிமிக்கி பொன்னு ஆகிய இரண்டு பாடல்கள் வாரிசு இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் பாடப்பட்டது.


வாரிசு, துணிவு படத்தின் ரிலீஸ் எப்போது?


பொங்கலுக்கு இன்னும் ஒரு  வாரமே உள்ள நிலையில் துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள Aries Plex SL  சினிமா தியேட்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதியும், வாரிசு படம் ஜனவரி 12 ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருபடங்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் எனவும், முதல் காட்சி அதிகாலை 4 மணி எனவும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.


இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், இரு படங்களின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலுடன் ஒத்துப்போவதால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளனர்.