இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸின் கேப்டன் ஷிவா சௌஹான், சியாச்சின் போர்ப் பள்ளியில் ஒரு மாத கடினமான பயிற்சிக்குப் பிறகு, உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சினில் மற்ற பணியாளர்களுடன் இணைந்து செயல்படும் முதல் பெண் அதிகாரி ஆனார். 






கடினமான பயிற்சியை முடித்த பின்னர் அதிகாரி ஷிவா சௌஹான், குமார் போஸ்டுக்கு அனுப்பப்பட்டதாக ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் நேற்று அறிவித்தது. ராஜஸ்தானைச் சேர்ந்த கேப்டன் ஷிவா சௌஹான் (Bengal sapper), உதய்பூரில் பள்ளிப்படிப்பை முடித்து உதய்பூரில் உள்ள என்ஜேஆர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றார். 11 வயதிலேயே தந்தையை இழந்த இவர்,  குழந்தைப் பருவத்திலிருந்தே, அவர் இந்திய ஆயுதப் படையில் சேர ஆயத்தமாக இருந்தார்.  சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (OTA) பயிற்சியின் போது இணையற்ற வைராக்கியத்தை கொண்டு செயல்பட்டார்.




மேலும் மே 2021 இல் பொறியாளர் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார். ஜூலை 2022 இல் கார்கில் விஜய் திவாஸ் அன்று நடத்தப்பட்ட சியாச்சின் போர் நினைவுச்சின்னத்தில் இருந்து கார்கில் போர் நினைவுச்சின்னம் வரை 508 கி.மீ தூரத்தை வெற்றிகரமாக வழிநடத்தியதன் மூலம் கேப்டன் ஷிவா துணிச்சலையும் உறுதியையும் வெளிப்படுத்தினார். சுரா சோய் பொறியாளர் படைப்பிரிவின் ஆட்களை உலகின் மிக உயரமான போர்க்களத்தில் வழிநடத்தும் சவாலை ஏற்றுக்கொண்டார், மேலும் அவரது செயல்திறன் அடிப்படையில், சியாச்சின் போர்ப் பள்ளியில் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 






ஷிவா சௌஹான் போர்ப் பள்ளியில் கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டார், அங்கு அவர் இந்திய இராணுவத்தின் மற்ற அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி பெற்றார். பயிற்சியில்  பனி சுவர் ஏறுதல், பனிச்சரிவு மற்றும் கடுமையான சூழலில் உயிர்வாழும் திறன் ஆகியவை அடங்கும். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தளராத அர்ப்பணிப்புடன் கேப்டன் ஷிவா சௌஹான் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார்.


கடினமான பனி மலை ஏறும் சவாலை முடித்த பிறகு ஜனவரி 2 அன்று அவர் சியாச்சின் பனிப்பாறையில் (siachen glaciers) சேர்க்கப்பட்டார். கேப்டன் ஷிவா சௌஹான் தலைமையிலான சாப்பர்ஸ் குழு பல போர் பொறியியல் பணிகளுக்கு பொறுப்பாக இருக்கும் மற்றும் மூன்று மாதங்களுக்கு பதவியில் இருப்பார்கள்.