பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'பதான்'. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் உருவாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், 2023 ஜனவரி, 25ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே பதான் படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் , பதான் படத்தின் ட்ரெய்லர் மீது  மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 10, 2023 அன்று பதானின் டிரெய்லர் வெளியிடப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.






பதனின் டீசர் இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டது. தற்போது ட்ரெய்லர் வெளியீடு குறித்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. பதானின் ட்ரெய்லர்,  2 நிமிடம் 37 வினாடிகள் நீளம்  கொண்ட ட்ரெய்லர் என்றும், அதில் ஆக்‌ஷன் காட்சிகள், மாஸான இசை மற்றும் ஹீரோயிசம் நிரம்பியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஷாருக்கான் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பதான் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சர்ச்சையில் சிக்கிய பதான் பட பாடல் :


பதான் படத்தில் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோன் கவர்ச்சியின் உச்சத்தில் தோற்றமளித்ததால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பதான் படத்தின் இந்த பாடலில் ஷாருக்கான் - தீபிகா படுகோன் இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி அமர்க்களமாக இருந்ததை ரசிகர்கள் பாராட்டினார்கள். ஆனால் , இந்த பாடலில் காவி மற்றும் பச்சை நிறத்திலான ஆடைகள் பயன்படுத்தப்பட்டதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சர்ச்சை அந்த படத்திற்கு ஒருவகையான ப்ரோமோஷனாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.




நாடாளுமன்றத்தில் பதான் குறித்து பேச்சு:


சில நாட்களுக்கு முன் நடைப்பெற்ற நாடாளுமன்ற மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி குன்வர் டேனிஷ் அலி பேசினார். 


அப்போது அவர், “இந்துக்களின் உணர்வுகளை புண் படுத்துவதாக்கூறி, பதான் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, பாஜக உறுப்பினர் பலர் அதிகாரிகள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பதான் படத்தின் பிரச்சனை ஒரு புதிய வழக்காகவே மாறி விட்டது” என்று கூறினார். 


“இஸ்லாமியர்கள் பலவீனமானவர்கள் அல்ல..”


பதான் பட பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிய அவர், “சினிமாவிற்கு ஒப்புதல் அளிப்பதையோ, தடை விதிப்பதையோ தணிக்கை குழுவிடம் விட்டுவிட வேண்டும். யாரோ காவி உடை அணிவதால் ஆபத்துக்கு உள்ளாவதற்கு சனாதன தர்மம் பலவீனமானது அல்ல, அது போல் இஸ்லாமிய மதமும் பலவீனமானது அல்ல” என்றார்.