வாரிசு படத்தில் பணியாற்றிய பிரபல புரொடக்‌ஷன்ஸ் டிசைனர் ( தயாரிப்பு வடிவமைப்பாளர்) சுனில் பாபு மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரித்து, இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்த படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக  நடிக்க, ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், சுமன், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 






வாரிசு படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்  நிறுவனம் பெற்றது. தமிழத்தின் பிற மாவட்டங்களில் படத்தை வெளியிடும் உரிமையை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 4 ஆம் தேதி வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 


மேலும் படமானது ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த படத்தில் புரொடக்‌ஷன்ஸ் டிசைனராக சுனில் பாபு என்பவர் உயிரிழந்துள்ளார்; முன்னணி கலை இயக்குநரான சாபு சிரிலிடம் உதவியாளராக இருந்த சுனில் பாபு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பல முன்னணி திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.






குறிப்பாக விஜய் நடித்த துப்பாக்கி, நிவின் பாலி நடித்த பிரேமம், இந்தியில் வெளியான கஜினி, எம்.எஸ்.  தோனி ஆகிய படங்களிலும் அவரது பணி வெகுவாக பாரட்டப்பட்டது. வாரிசு படத்திலும் அவரது பணி சிறப்பாக இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்; இந்நிலையில் சுனில் பாபு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்னும் 5 நாட்களில் வாரிசு படம் வெளியாகவுள்ள நிலையில், சுனில் பாபு மரணச் செய்தி விஜய் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.