பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் டெய்ஸியின் மகளான சித்த மருத்துவர் ஷர்மிகா தான் இப்போது  ‘டாக் ஆஃப் த டவுன்’.


நெட்டிசன்களின் விமர்சனத்துக்குள்ளாகும் ஷர்மிகா


‘அறிவியலைத் தள்ளி வையுங்கள்’ எனப் பேசத் தொடங்கி சரமாரியாக அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை தன் நேர்காணலில் பேசி வரும் சித்த மருத்துவர் ஷர்மிகாவை இணையவாசிகள் கடந்த சில நாள்களாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர்.


இவரது அம்மா டெய்ஸி சரண் தொலைக்காட்சிகளில் மருத்துவக் குறிப்புகள் வழங்கி பிரபலமான நிலையில், சித்த மருத்துவரான ஷர்மிகா, யூ ட்யூப் சானல்களுக்கு அறிவியலைத் தள்ளி வையுங்கள் எனப் பேட்டி அளித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


’அறிவியல் வேண்டாம்’


”அறிவியல் வேண்டாம், நம்மை விட பெரிய விலங்கான பீஃபை சாப்பிடக்கூடாது”, “கருவுக்காக பாலியல் உறவு வைத்துக் கொள்வதைத் தாண்டி, இயற்கை, கடவுள் தான் ஒத்துழைக்க வேண்டும்.  


ஒரு ஆள் செய்த தீமையால் வாரிசு இருக்கக்கூடாது என்றால் இருக்காது, ஆனால் நல்ல மனிதராக இருந்தால் குழந்தை பிறந்துவிடும்” என தன் பேட்டிகளில் ஷர்மிகா பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியது.


இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு முதல் ஆளாக ஷர்மிகாவை விமர்சித்த பாடகி சின்மயி தற்போது ஷர்மிகா சர்ச்சையில் சிக்கியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


சின்மயி பதிவு


”கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் ஒரு ரியாக்‌ஷன் வீடியோ அப்லோட் பண்ணி இருந்தேன். “நமது தோலே பெரிய வாய். அதில் கெமிக்கல்களை போடக்கூடாது, ஷாம்பூ போடக்கூடாது ரத்தத்தில் கலந்துவிடும்” என ஷர்மிகா பேசியிருந்தார். 


அவரை அப்போது நான் விமர்சித்தபோது என்னை மிக மோசமான விமர்சித்தார்கள்.  ஆனால் இப்போது பலரும் அவரது வீடியோக்களை எடுத்து பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


நான் அவரை (ஷர்மிகாவை) விமர்சித்தபோது நான் ஏதோ பாவம் செய்தது போல் என்னைத் திட்டனார்கள். நான் சமீபத்தில் ஷர்மிகாவின் மற்றொரு வீடியோவைப் பார்த்தேன். ”நீங்கள் நல்லவரா இருந்தால் குழந்தை பிறக்கும், கெட்டவரா இருந்தால் பிறக்காது” எனப் பேசியுள்ளார்.


எனக்கு தெரிஞ்சு பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர், ரேப்பிஸ்ட், குழந்தைகளை பாலியல் வன்முறை செயதவர்களுக்கு எல்லாம் குழந்தை பிறக்கிறது.


இதில் வியப்பு என்னவென்றால், என்னை அப்போது மோசமாக விமர்சித்து விட்டு தற்போது இப்போது ஷர்மிகாவை பல யூட்யூப் சானல்கள் சுட்டிக்காட்டுகிறேன் என போட்டிபோட்டு விமர்சித்து வருகிறார்கள்” என சின்மயி தெரிவித்துள்ளார்.


முன்னதாக பெண்கள் குப்புறப் படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும் என்றும் ஷர்மிகா தெரிவித்த நிலையில், மருத்துவத்துக்கு எதிரான தகவல்களைக் கொடுத்த ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இணை இயக்குநர் பார்த்திபன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.