இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான பாலா, வர்மா படத்துக்குப் பிறகு ‘வணங்கான்’ படத்தை இயக்கி வருகிறார்.


விலகிய சூர்யா:


இந்தப் படத்தில் முதலில் நடிக்க நடிகர் சூர்யாவும், நடிகை கீர்த்தி ஷெட்டியும் ஒப்பந்தம் செய்யப்பட்டு, இதுகுறித்த அறிவிப்பு சென்ற ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


ஆனால் படப்பிடிப்பின்போது பாலாக்கும் சூர்யாவுக்கும்  இடையே மோதல் வெடித்ததாகத் தகவல்கள் வந்த நிலையில், தொடர்ந்து சென்ற டிசம்பர் 4ஆம் தேதி வணங்கான் படத்திலிருந்து தான் விலகுவதாக  சூர்யா  அறிவித்தார்.


வணங்கான்:


அதேபோல், கதையில் நடந்த சில மாற்றங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகியதாகவும், வேறு கட்டத்தில் தாங்கள் இணைவோம் என்றும் பாலா தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 


இச்சூழலில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய்யும் , படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷூம் ஒப்பந்தம் செய்யப்பட்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இதுகுறித்த ஷூட்டிங் ஸ்பாட் படங்களும் முன்னதாக இணையத்தில் வெளியாகி வைரலாகின.


அடுத்தகட்ட படப்பிடிப்பு:


தொடர்ந்து இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்ற மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்நிலையில்,  ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்தப் படத்திற்கு ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார்.


சர்ச்சை:


முன்னதாக வணங்கான் படப்பிடிப்பில் துணை நடிகை லிண்டா என்பவர் தாக்கப்பட்டதாகவும் அதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.  வணங்கான் ஷூட்டிங்கில், கேரளாவைச் சேர்ந்த ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த நிலையில், துணை நடிகை லிண்டாவுக்கு மூன்று நாட்களுக்கு உண்டான சம்பளத்தைத் தராததாகக் கூறப்பட்டது. தொடர்ந்து இதனைக் கேட்கப் போன லிண்டாவை ஜிதின் கடுமையாகத் தாக்கியுள்ளார். 


இதில் கன்னத்தில் மோசமான காயம் ஏற்பட்ட நிலையில் துணை நடிகை லிண்டா கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். தொடர்ந்து அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,  திரையுலகினர் மத்தியில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Crime: பைக்கில் முன்னாடியும் பின்னாடியும் பெண்கள்.. நடுவில் அமர்ந்து நடுரோட்டில் வீலிங் செய்த இளைஞர்..! குவியும் எதிர்ப்புகள்..!