மும்பையில் இரண்டு பெண்களை பைக்கில் அமரவைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களைப் பெற்று வருகிறது.


முன்னும், பின்னும் பெண்:


மிகவும் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை தனக்கு முன்னும் பின்னும் அமரவைத்துக் கொண்டு வீலிங் ஸ்டண்டில் ஈடுபடும் இந்த வீடியோவை, முன்னதாக சமூக ஆர்வலர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் 13 வினாடி கொண்ட இந்த க்ளிப் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று இணையத்தில் வைரலானதுடன் கடுமையான கண்டங்களையும் பெற்றது.


தொடர்ந்து இந்த வீடியோ மும்பை காவல் துறையினரின் கவனத்துக்கு சென்ற நிலையில், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (பிகேசி) காவல் துறையினர் இந்த மூன்று பேரையும் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


 






மேலும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவுகள் 279, 336இன் கீழ் இந்த இளைஞர் மீதும், இரண்டு பெண்கள் மீது பிரிவு 114இன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இவர்களது போக்குவரத்தை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யும்படியும் பிராந்திய போக்குவரத்து அலுவலகத்திடம் மும்பை போக்குவரத்து காவலர்கள் சார்பில் கோரப்பட்டுள்ளது.


முந்தைய சம்பவம்


இதேபோல் முன்னதாக சென்னை அண்ணா சாலையில், பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபரின் வீடியோ இணையத்தில் வைரலானது. ஹைதராபாத் இளைஞர் ஒருவர் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்ட நிலையில்,  நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இளைஞருக்கு போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும்படி தண்டனை வழங்கப்பட்டது.


முன்னதாக பைக் ஸ்டண்டில் பல இளைஞர்கள் ஈடுபட்டு பொது போக்குவரத்துக்கு இடையூறு செய்த நிலையில், இதுதொடர்பாக ஆறு பேரை அடுத்தடுத்து காவல் துறையினர் கைது செய்தனர். 


நூதன தண்டனை:


இவர்களில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவரான ஹைதராபாத்தைச் சேர்ந்த கோட்லா அலெக்ஸ் பினோய் எனும் 22 வயது யூடியூபர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த நபருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்டனை வழங்கப்பட்டது.


இந்நிலையில் ஹைதராபாத் இளைஞர் எங்கு பைக் சாகசத்தில் ஈடுபட்டாரோ, அதே இடத்தில் வாரம் ஒருநாள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணிமுதல் 6.30 மணி வரையிலும் போக்குவரத்து விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும் என்றும், பிற நாள்களில் காலை 8 முதல் பகல் 12 மணி வரையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனை, விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் உதவியாக இருக்க வேண்டும்” என்றும் நூதன தண்டனை வழங்கப்பட்டது.


மேலும் படிக்க: Trichy: இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து - 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை