பொங்கலுக்கு வெளியான இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்களில்  ஒன்றான விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தை இயக்கியவர் தெலுங்கு தயாரிப்பாளரான வம்சி பைடிபள்ளி. குடும்ப சென்டிமென்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக சாதனை படைத்தது வருகிறது. 


 



வம்சி - விஜய் - எஸ். தமன்


 


தரவரிசையில் முன்னிலை :


நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, சங்கீதா, ஷ்யாம், சம்யுக்தா, விடிவி கணேஷ் என மிக பெரிய திரை பட்டாளம் நடித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானதன் மூலம் நேரடியாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி மற்றும் இசையமைப்பாளர் எஸ். தமன் இருவரும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ள முதல் திரைப்படம் இதுவாகும். எஸ். தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன. குறிப்பாக கே.எஸ். சித்ரா பாடிய 'ஆராரிராரோ' பாடலும் விஜய் - மானசி பாடிய 'ரஞ்சிதமே' பாடலும் தரவரிசையில் முன்னணி வகிக்கின்றன. 


 






 


தமனும் நானும் :


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் இயக்குனர் வம்சி, இசையமைப்பாளர் எஸ். தமன் உடன் தனக்கு இருக்கும் பிணைப்பு பற்றி மனம் திறந்து பேசியிருந்தார். "தென்னிந்திய சினிமாவின் மிகவும் தேடப்படும் திறமையாளர்களில் ஒருவரான எஸ். தமன் பல போராட்டங்களை கடந்து இந்த நிலைமையை அடைந்துள்ளார். இப்படத்தின் ஆறு பாடல்களையும் மிகுந்த உற்சாகத்தோடு இசையமைத்து 'சிக்ஸ் சிக்ஸர்களை' வழங்கியுள்ளார். தமனும் நானும் எங்களுக்குள் இருக்கும் பிணைப்பை அண்ணன் - தம்பி போன்ற உறவாக எண்ணுகிறோம். அவரது தந்தை மிகவும் இளம் வயதிலேயே இறந்து விட்டதால் தனது 13 வயதிலேயே சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார். குடும்பத்தின் பொறுப்பு தன் மீது வரவே அவரின் நோக்கத்தை அடைவதற்காக கடுமையாக உழைத்தார். அவரின் இசை பயணம் எளிதாக அமையவில்லை. அவரை சுற்றிலும் ஏராளமான நெகட்டிவிட்டி இருந்தன. அவை அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் பதிலளித்தார்" என்று தமன் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார் இயக்குனர் வம்சி. 



தமனின் உணர்ச்சிகரமான போஸ்ட் :


இயக்குனர் வம்சியின் இந்த வார்த்தைகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட இசையமைப்பாளர் எஸ். தமன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் உணர்ச்சிவசப்பட்டு " வம்சி, நன்றி நண்பா... எங்களுக்கு ஒரு நல்ல குழு அமைந்தது. எங்கள் அனைவரையும் நீ இதன் மூலம் மகிழ்ச்சியடைய செய்தாய்" என ட்வீட் செய்து இருந்தார் தமன்.