2022ம் ஆண்டின் பொங்கல் கொண்டாட்டமாக அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் இருக்கப் போவதை எண்ணி அவரது ரசிகர்கள் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே உற்சாகமாகக் காத்திருந்தார்கள். ஆனால், கொரானோ அலை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.






இன்று ஜனவரி 13ம் தேதிதான் 'வலிமை' படம் வெளியாகி இருக்க வேண்டும். வேறு எந்த பெரிய படங்களும், முன்னணி நடிகர்களின் படங்களும் இல்லாத காரணத்தால் 'வலிமை' வெளியீட்டை பெரும் உற்சாகத்துடன் கொண்டாட இருந்த ரசிகர்கள் இப்போது கடும் வருத்தத்தில் உள்ளனர். பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொரானோவைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ட்விட்டரில் #ValimaiFDFS ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. 






அந்த டேக்கின் கீழ் ரசிகர்கள் வலிமை முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டமாக இன்று இருந்திருக்க வேண்டியது, ஆனால் இப்படி இருக்கிறது நிலமை என்று மிகவும் வருத்தத்தில் ட்வீட் செய்து வருகின்றனர். தியேட்டர்களின் ட்விட்டர் பக்கங்களும் அதே டேகில் பதிவு செய்து வருகின்றன. அதேவேளையில் பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயத்துக்காக எடுக்கப்பட்ட முன்னெடுப்பை மனதார ஏற்றுக்கொள்வதாகவும், காத்திருந்து கொண்டாடுவதில் தவறில்லை என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர்






அஜித் நடித்து கடைசியாக 2019ம் ஆண்டு தீபாவளிக்கு 'நேர் கொண்ட பார்வை' படம் வெளிவந்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்னும் சில மாதம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. படம் எப்போது வெளிவரும் என்பது குறித்து அறிவிப்புகள் கொரானோ அலையின் தீவிரம் குறைந்த பிறகே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






இப்போது வந்திருந்தால் 'சோலோ'வாக வந்திருக்கலாம். அடுத்து வரும் போது இப்படி சோலோவாக வர வாய்ப்பில்லை. கூடவே, போட்டிக்கு வேறு படங்களும் வரலாம். விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' உடன் வந்தால் பரவாயில்லை, 'ஆர்ஆர்ஆர்' உடன் வந்தால் தியேட்டர் எண்ணிக்கை குறையும். பொறுத்திருந்து பார்ப்போம் என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.