ஒளிப்பதிவாளர் என்பதை கடந்து, இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அற்புத படைப்புகளை தந்தவர் என்பதால், என்றும் கொண்டாடப்பட வேண்டியவர் இயக்குனர் தங்கர்பச்சான். தன் நாவல்களை திரைப்படங்களாக உருவாக்கிய தங்கர்பச்சானின் படைப்புகள், அனைத்து தரப்பையும் சென்றடைந்ததோடு, உணர்வோடு கலந்தவையாகவும் அவை இருந்தன. அவரது முதல் படமான 'அழகி'யில் இளையராஜாவின் இசை, பின்னணி பெரிய பலம். அது பற்றி சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு தங்கர்பச்சான் பேட்டியளித்தார். இதோ அந்த பேட்டி...


 



ஒளிப்பதிவாளர்-இயக்குனர்-தங்கர்பச்சான்


‛‛இளையராஜாவை சினிமா இசையமைப்பாளராக எல்லோரும் பார்க்கிறீர்கள். வேறு வழியில்லாமல் இதை பண்ணிட்டு இருக்காரு. உலக அரங்கில் அவர் போயிருந்தால், பீத்தேவன் அளவிற்கு கொண்டு சென்றிருப்பார்கள். அவர் ஒரு கடல். யார் என்ன சொன்னாலும், கேட்பதை கொடுத்துக் கொண்டே இருக்காரு. அவரது இசையில் நான் நிறைய படத்தில் கேமரா மேனா வேலை செய்திருக்கேன். எனது முதல் படத்திற்காக அவரிடம் இசைக்க போகும் போது, சிறுகதையா படித்து காட்டினேன். நாவலா படித்து காட்டினேன். அவரிடம் செல்லும் போது தெளிவாக இருக்க வேண்டும் என்பதால் தயாராகவே போனேன். 


பாடலுக்கு தொடர்பான காட்சிகளை நான் எழுத்து வடிவில் இளையராஜாவிடம் எடுத்துச் செல்வேன். எல்லாத்தையும் கேட்பார். அவருக்கு புரிந்துவிடும். அடுத்து ஒரு கோரிக்கை வைத்தேன். நீங்க தான் பாடல் எழுத வேண்டும் என்றேன். ‛எதற்கு பாடலாசிரியர்கள் பிழைப்பில் கை வைக்க வேண்டும்’ என தயங்கினார். நான் அவரை வற்புறுத்தினேன். நீங்கள் ஒரு கிராம பின்னணியில் இருந்து வந்தவர்; உங்களுக்கு அது வேதனை தெரியும். நீங்கள் எழுதினீர்கள் என்றால் சரியாக இருக்கும் என்றேன், அவரும் அதை புரிந்து கொண்டு மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். அப்படி தான் அவர் எனது படத்திற்கு பாடல் எழுதினார். 


நானும், லெனின் சாரும் போட்டு போட்டு பார்க்குறோம். எப்படி பார்த்தாலும் எங்களுக்கு சிக்கவில்லை. உன் குத்தமா பாடலை அங்கு போட்ட பிறகு தான், அந்த இடத்தில் வேறு உணர்வு வந்தது. 


 



அழகி திரைப்படத்தின் மறக்க முடியாத காட்சி


சாலையில் வீடில்லாமல், பிச்சைக்காரர்கள் மாதிரியான நிலையில் இருக்கும் ஒரு தொழிலாளர்களுடன், எங்கேயோ எப்படியோ இருக்க வேண்டிய மகனுடன், தேவதை மாதிரி இருக்க வேண்டிய ஒரு பெண் வாழ்கிறாள். அவன் விரும்பியவனும் இல்லை, மணந்தவனும் இல்லை. இந்த நிலையில் இப்போது இருக்கிறாள். இதற்கு யார் காரணம்? யார் செய்த குற்றம் இது? என்று தான், நான் இளையராஜாவிடம் கூறினேன். அவ்வளவு தான்... அவர் ரொம்ப கூர்மையானவர். கேட்டதும், போட்டாரு.... ‛உன் குத்தமா... என் குத்தமா... யாரை நானும் குத்தம் சொல்ல...’. . அவ்வளவு தான், அந்த பாடல் செய்த மந்திரம் வேறுவிதமானது. 


 



அழகி படப்பிடிப்பு தளம்


முதல் நாள் சூட்டிங் வந்த நந்திதா தாஸ், அவருக்கு அந்த சூழலே பிடிக்கவில்லை. ‛என்ன தங்கர்... நாம் ஏமாந்துட்டேனோ...’ என்றெல்லாம் கூற ஆரம்பித்துவிட்டார். முதல்நாளே அவர் திரும்பிச் செல்லும் சூழலுக்கு தயாரானார். முதல் காட்சிக்கு நாங்கள் எல்லாம் அவ்வளவு தயாராக இருந்தோம். செயற்கை மழை உருவாக்கி வைத்திருந்தோம். திரைப்பட கல்லூரியில் ஒரு ஓரத்தில் வைத்து தான் அந்த காட்சி எடுத்தேன். ஒரே ரோலில் அந்த பாடலை எடுத்தோம்,’’ என, அந்த பேட்டியில் தங்கர்பச்சான் கூறியிருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண