நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. படம் மக்களிடையே கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் வலிமைத்திரைப்படம் 35ல் இருந்து 40 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக தகவல் வெளியானது.
முதல் நாள் முடிவில், உலக அளவில் சேர்த்து பார்த்தால் வலிமைத்திரைப்படம் மொத்தம் 48-ல் இருந்து 50 கோடி ரூபாய் வசுலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது நாள் முடிவில் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலாகி சாதனைப்படைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் 60% வசூல் தமிழ்நாட்டில் இருந்து வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அஜித் திரைப்படங்கள் குவித்த வசூல் வேட்டையில், 3 நாட்களில் 100 கோடி ரூபாயை அள்ளி இருக்கும் முதல் படம் ‘வலிமை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வலிமைத்திரைப்படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. படத்தின் பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தாலும், பின்னணி இசை ஜிப்ரான் அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு, திலீப் சுப்பராயன் சண்டை இயக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கலவையான விமர்சனம் வர முக்கிய காரணமாக படத்தின் நீளம் சொல்லப்பட்டது. ரசிகர்களின் இந்த கருத்து படக்குழுவின் காதுகளை எட்டியதை அடுத்து, படத்தின் காட்சிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழில் 12 நிமிடங்கள் குறைக்கப்படுவதாகவும், இந்தியில் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்