அகல் விளக்குகளைப் பயன்படுத்தி பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கண் மை, கண்ணுக்குக் குளிர்ச்சி தருவதோடு, கண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது.


கண்ணிற்கு மை இட்டாலே பெண்களுக்குக் கூடுதல் அழகு சேர்க்கும். கண்ணுக்கு குளிர்ச்சி தருவதோடு, கண்ணில் உள்ள அழுக்கை அகற்றும் என்பதாலே நம் முன்னோர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் கண்களில் மையிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது கண்களைப்பாதுகாப்பதோடு அழகையும் அள்ளித்தரும். இதற்காகவே வீடுகளில் கண் மையை தயாரித்துப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் வீடுகளில் யாரும் கண்ணிற்கு இடும் மைகளை தயாரிப்பது இல்லை. விதவிதமாகவும் பல்வேறு பிராண்டுகளில் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இதெல்லாம் நம்முடைய கண்களைப் பாதுகாப்பாக வைக்க உதவியாக இருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் இல்லை.



தற்போது சந்தைகளில் விற்பனையாகும் கண் மைகளை வாங்கி உபயோகிக்கும் போது சிலருக்கு கண் எரிச்சல், கண் பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது. இதுப்போன்ற பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் இனி அந்த கவலை வேண்டாம். கண்களைப் பாதுகாக்க வீட்டிலேயே பாரம்பரிய கண் மையை தயாரித்துப் பயன்படுத்த ஆரம்பியுங்கள். இதோ பாரம்பரிய கண் மை தயாரிக்கும் முறைக்குறித்து இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.


பாரம்பரிய கண் மை தயாரிக்கும் முறை:


தேவையான பொருள்கள்:


சுத்தமான சந்தனப்பொடி (சந்தன மாத்திரைகளை வாங்கிவிடாதீர்கள். விலை உயர்ந்த சந்தனம் வாங்கவும்)


அகல்விளக்கு


நல்லெண்ணெய்


விளக்கெண்ணெய்


தடினமான திரி


மண் தட்டு அல்லது எவர்சில்வர் தட்டு


மண் டம்ளர் அல்லது எவர்சில்வர் டம்ளர்.


செய்முறை:


முதலில் அகலமான அகல்விளக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஊற்றி தடினமான திரியை அதில் வைக்கவேண்டும்.


தட்டில் வெண்ணெய் அல்லது சுத்தமான சந்தனப்பொடியை குலைத்து எவர்சில்வர் தட்டில் தேய்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு மண் தட்டு கிடைத்தால் அதனையும் நீங்கள் பயன்படுத்தலாம்.


பின்னர் அகல்விளக்கை விட சற்று உயரமான 3 பாத்திரத்தை வைத்து அதன் மேல் தட்டை வைத்து மூட வேண்டும். பின்னர் விளக்கை ஏற்றி சந்தனப்பொடி தடவிய தட்டை கவிழ்த்து வைக்க வேண்டும்.


கொஞ்சம் கொஞ்சமாக தட்டை திரிப்பி வைத்துக்கொண்டே வரும். இப்படி ஒரு மணி நேரம் இப்படி செய்யும்போது தட்டில் கறிப்படித்திருக்கும்.


இதன் பிறகு தட்டில் உள்ள கரியை தனியாக எடுத்து பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எடுத்துவைக்கும் கரி பவுடர் ஒராண்டிற்குக் கூட கெடாமல் இருக்கும். 



பின்னர் கரி பவுடரில் கரிசலாங்கண்ணி செடி கிடைத்தால் இதனுடன் இரு சொட்டு இட வேண்டும். இது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.


இதனையடுத்து கரிப்பவுடரை விளக்கெண்ணெய் அல்லது சுத்தமான நெய் கொண்டு கரைத்துக்கொள்ள வேண்டும்.


இவ்வாறு நாம் உபயோகிக்கும்போது கண்ணில் எரிச்சல் ஏற்படாது. எனவே பிறந்த குழந்தைகள் முதல் சிறுமிகள், பெண்கள் என அனைவரும் இதனை உபயோகிக்கலாம். இதனால் எவ்வித எரிச்சலும் கண்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை.  எனவே இனிமேல் பாரம்பரிய கண் மையை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தத் தொடங்குங்கள்.