சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ள நிலையில் இதுதொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


பொதுவாக தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருக்கும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக தியேட்டர்கள் திகழ்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகளால் நம்மை கட்டிப்போட்ட பங்கு அந்த 3 மணி நேர காட்சிகளுக்கு உண்டு. அப்படிப்பட்ட தியேட்டர்கள் காலப்போக்கிற்கு ஏற்றவாறு அப்டேட் வெர்ஷனாக மாற்றப்பட்டாலும், பல பிரபல தியேட்டர்கள் திருமண மண்டபம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆக கட்டப்பட்டது சோகத்திலும் சோகமான நிகழ்வு தான்.


இப்படியான நிலையில் சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையின் மிக முக்கியப்பகுதியாக உள்ள அசோக் நகரில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 ஸ்கிரீன்களுடன் கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தியேட்டர் சென்னை மட்டுமல்லாது வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற தியேட்டராகவும் திகழ்ந்தது. உண்மையில் இந்த தியேட்டரால் ஏழை, எளிய மக்கள் சினிமா பார்க்கும் கனவு  நிஜமானது என்பதே உண்மை.


பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய தியேட்டர் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களின் ஷூட்டிங்கும் இந்த தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றுள்ளது. உதயம் தியேட்டர் என்றாலே கொண்டாட்டம் என்றிருந்த நிலையில் அந்த தியேட்டர் மூடப்படுவது மிகவும் வருந்ததக்க ஒன்றாகவே உள்ளது. இதன் அருகில் இருக்கும் உதயம் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களை பிரபலமான கட்டுமான நிறுவனம் விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் உதயம் தியேட்டர் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. 






 இந்நிலையில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த தியேட்டர் மூடப்படுவது திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து உதயம் தியேட்டர் தொடர்பான பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


அதில்,


“ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
 இதயம் கிறீச்சிடுகிறது.


முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை வெளியிட்ட
உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன

மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு
எதுவும் தப்ப முடியாது என்று
மூளை முன்மொழிவதை
இதயம் வழிமொழிய மறுக்கிறது

இனி அந்தக் காலத் தடயத்தைக்
கடக்கும் போதெல்லாம்
வாழ்ந்த வீட்டை விற்றவனின்
பரம்பரைக் கவலையோடு
என் கார் நகரும்


-நன்றி உதயம்” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Vijay - AjithKumar: தல - தளபதி ரசிகர்களே தயாரா? - ரீ-ரிலீஸ் ஆகும் காதலுக்கு மரியாதை,வாலி படங்கள்..!