90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீரா ஜாஸ்மின். கேரளாவில் பிறந்த வளர்ந்த மீரா ஜாஸ்மின் இயற்பெயர் ஜாஸ்மின் மேரி ஜோசப். 'சூத்ரதாரன்' என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். தன்னுடைய குறுகுறு பார்வையாலும் துறுதுறுப்பான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர். லிங்குசாமியின் 'ரன்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான மீரா ஜாஸ்மின் 42வது பிறந்தநாள் இன்று. 


 



மலையாள திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த மீரா ஜாஸ்மின் 2003ம் ஆண்டு வெளியான 'பாடம் ஒன்னு : ஒரு விலபம்' என்ற திரைப்படத்தில் ஷாகினா என்ற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.  


2002ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'ரன்' படத்தில் நடிகர் மாதவன் ஜோடியாக அலட்டல் இல்லாத அமைதியான நடிப்பு, அழகான தோற்றதால் காதல் பிசாசே என செல்லமாக கொண்டாடப்பட்டார். அப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். 


விஜய் நடிப்பில் வெளியான 'புதிய கீதை' படத்தில் சுசி என்ற கதாபாத்திரத்தில் வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். வணிக ரீதியாக அப்படம் நல்ல வரவேற்பை பெற தவறினாலும் மீரா ஜாஸ்மின் நடிப்பு ரசிகர்களின் கவனம் பெற்றது. பாலா, ஆஞ்சநேயா, ஜூட் என அடுத்தடுத்த பல படங்களில் நடித்தாலும் அவை பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. 


தோல்வியில் துவண்டு போன மீரா ஜாஸ்மினுக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் படமாக அமைந்தது லிங்குசாமியின் 'சண்டக்கோழி' திரைப்படம். 2005ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஷால் ஜோடியாக ஹேமா கதாபாத்திரத்தில் அருந்தவால் கேரக்டரில் மிகவும் அசத்தலாக நடித்த மீரா ஜாஸ்மின், ஆண்களை மட்டுமல்ல பெண் ரசிகைகளையும் கவர்ந்து விட்டார். தமிழக அரசு வழங்கும் சிறந்த நடிகைக்கான விருது மற்றும் கலைமாமணி விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார் நடிகை மீரா ஜாஸ்மின். 


 




சண்டக்கோழி படத்திற்கு பிறகு அவர் நடித்த சில படங்கள் பெரிய அளவில் சோபிக்க தவறினாலும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். 2008ம் ஆண்டு வெளியான 'நேபாளி' திரைப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக நடித்திருந்தார். படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 


கடந்த ஆண்டு இறுதியில் மலையாளத்தில் 'குயின் எலிசபெத்' என்ற படத்தில் நடித்திருந்தார் மீரா ஜாஸ்மின். தமிழ் திரைப்படங்களில் மீண்டும் மீரா ஜாஸ்மினை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரின் ரசிகர்கள். திரைப்படம் மூலம் அவரை பார்க்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த ஆண்டு பல நல்ல வாய்ப்புகள் அவரின் நடிப்பு திறமைக்கு தீனியாய் அமைய வாழ்த்துக்கள்.